Home One Line P1 இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்

இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர்.

“அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம். இது தொடர்கிறது, எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் கூறினார்.

இந்திரா காந்தியை தனது மகள் பிரசன்னா டிக்சாவுடன் மீண்டும் ஒன்றிணைக்கும் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில், தமது தரப்பு பொருத்தமான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அப்துல் ஹமீட் கூறினார்.

#TamilSchoolmychoice

தனது முன்னாள் கணவர் தப்பி ஓடிய பிறகு, இந்திராவின் நிலை மற்றும் தனது மகளிடமிருந்து பிரிந்த உணர்வுகள் குறித்து தனது தரப்பு தீவிரமாக எடுத்துக்கொண்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அவரது நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன், இந்திராவை மீண்டும் தனது மகளுடன் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

“அவரது முன்னாள் கணவர் மற்றும் மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைக்கு ஆபத்து ஏற்படாதவாறு காவல் துறையினர் அமைதியாக செயல்பட வேண்டும்.” என்று அவர் செய்த செய்தியாளர்களிடம் கூறினார்.

விரைவில் இந்திராவை சந்திக்க ஒரு மூத்த பெண் காவல் துறை அதிகாரியையும் அனுப்பப்போவதாக அப்துல் ஹமீட் கூறினார்.

“இது தனது கணவரின் இருப்பிடத்தைக் கண்காணிக்க காவல் துறையினர் கடுமையாக உழைத்து வருவதாக அவருக்கு நம்பிக்கை தெரிவிப்பதற்காகவே,” என்று அவர் கூறினார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் முகமட் ரிட்சுவான் அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக அண்டை நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

11 ஆண்டுகளுக்கு முன்பு பிரசன்னாவை கடத்திச் சென்றவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.

முகமட் ரிட்சுவான் அப்துல்லா அண்டை நாட்டில் அதிகாரிகள் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக ஓரிடம் விட்டு ஓரிடத்திற்கு நகர்கிறார் என்றும் அது கூறியது.

“காவல் துறை விசாரணைகளின் அடிப்படையில், முகமட் ரிட்சுவான் மலேசியாவில் இல்லை. வெளிநாட்டில் ஒரு நிரந்தர பகுதியில் இல்லாமல், அதிகாரிகள் விசாரணைகளை நடத்துவதை கடினமாக்குவதற்கு ஓர் இடத்திலிருந்து, வேறொரு இடத்திற்கு நகர்கின்றார்

“அவரது இருப்பிடத்தை அடையாளம் காண காவல் துறை அண்டை நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது” என்று உள்துறை அமைச்சகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்திருந்தது.

2011-இல் மார்ச் 11 அன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தனது மூன்று குழந்தைகளை அவரது மனைவி இந்திராவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்ட பிறகு, முகமட் ரிட்சுவான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

முகமட் ரிட்சுவானை தேடப்படும் நபராக அறிவித்ததை அடுத்து, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் முயற்சியில் அவர் குடிநுழைவுத் துறையால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டது.

கே. பத்மநாதன் மார்ச் 2009- இல் இஸ்லாமிய மதத்தினை தழுவி, மேலும் தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியுள்ளார். இது இந்திராவின் அனுமதியின்றி நடந்துள்ளது.

2009 – ஆம் ஆண்டில் 11 மாதமான அவர்களின் மகள் பிரசன்னா தீட்சாவுடன் முகமட் ரிட்சுவான் தப்பி ஓடிவிட்டார்.

முகமட் ரிட்சுவானைக் கைது செய்து பிரசன்னாவை மீட்டெடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்குமாறு 2016-ஆம் ஆண்டில், அப்போதைய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கருக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில், டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர், புக்கிட் அமான், மகளுடன் இந்திராவை மீண்டும் ஒன்றிணைப்பதில் ஒரு “மகிழ்ச்சியான முடிவை” நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படுவதாகக் கூறியிருந்தார்.