கோத்தாகினபாலு : சபா சட்டமன்றத் தேர்தலில் சாலே சைட் கெருவாக் போட்டியிடும் உசுக்கான் சட்டமன்றத் தொகுதியும் அரசியல் பார்வையாளர்களின் உன்னிப்பானப் பார்வை பதிந்த தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
காரணம், சாலே சைட் கெருவாக் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால், தேசிய முன்னணியும் சபா தேர்தலில் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றினால், அம்னோ சார்பிலான அடுத்த முதலமைச்சர் அவர்தான் என ஆரூடங்கள் வெளியாகத் தொடங்கியிருப்பதுதான்!
2018 வரை அம்னோ சபாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டத்தோஸ்ரீ பங்லிமா சாலே சைட் கெருவாக். தொடர்பு, பல்ஊடக அமைச்சராகவும் இருந்தவர்.
14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து அம்னோவில் இருந்து விலகினார் சைட் கெருவாக். பின்னர் பிகேஆர் கட்சியில் இணைய விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், அந்த விண்ணப்பம் குறித்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னரே பிகேஆர் கட்சியில் இணையாமல் மீண்டும் அம்னோவுக்கே திரும்பினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் அவர் அம்னோவில் மீண்டும் இணைந்தார்.
இத்தகைய குழப்பமான அரசியல் முடிவுகள் எடுத்தவர் என்றாலும், சைட் கெருவாக் சபா அரசியலில் மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவர். அவருடைய தந்தை முகமட் சைட் கெருவாக் சபா முதலமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியவர்.
சாலே சைட் கெருவாக் கூட 1994 முதல் 1996 முதல் சபா முதலமைச்சராக இருந்தவர். 2010 முதல் 2015 வரை சபா சட்டமன்ற அவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
உசுக்கான் தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கும் சாலே சைட் கெருவாக்
63 வயதான சாலே சைட் கெருவாக் செனட்டராகவும் இருந்தவர். இந்த முறை சபா சட்டமன்றத் தேர்தலில் உசுக்கான் சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார். மும்முனைப் போட்டியை எதிர்நோக்கி இருக்கிறார்.
ஏற்கனவே இந்த உசுக்கான் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சாலே சைட் கெருவாக்.
கோத்தா பெலுட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் ஒன்று உசுக்கான்.
2018 பொதுத் தேர்தலில் கோத்தா பெலுட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டார் சாலே சைட் கெருவாக். ஆனால் வாரிசான் சபா கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டார். அதைத் தொடர்ந்துதான் அப்போது அம்னோவில் இருந்து விலகினார்.
ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற அடிப்படையில் சைட் கெருவாக் உசுக்கான் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
அவரை எதிர்த்து வாரிசான் சபா கட்சி செகு அப்துல் பாக்ரின் பின் முகமட் யூசோப் என்பவரைக் களமிறக்கியுள்ளது. பிசிஎஸ் (பார்ட்டி சிந்தா சபா) கட்சியின் சார்பில் டத்து முகமட் நசாருடின் போட்டியிடுகிறார்.
சபா மாநிலம் முழுவதும் உள்ளூர் கட்சிகளுக்கு ஆதரவாக எழுந்திருக்கும் எழுச்சியை, வாரிசான் சபா கட்சிக்கு ஆதரவான அலையை சைட் கெருவாக் உசுக்கான் தொகுதியில் முறியடிக்க முடியுமா?
தேசிய முன்னணி தனித்து பெரும்பான்மை இடங்களை சபாவில் வெல்ல முடியுமா?
அப்படி நடந்தால் சைட் கெருவாக் மீண்டும் சபா முதலமைச்சராக வலம் வருவாரா?
கேள்விகளுக்கு விடைகாண காத்திருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!