புதுடில்லி : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தூதரக நல்லுறவுகள் மோசமடைந்து, எல்லைப்புற மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அனைத்துலக அளவில் வாணிபத்தில் ஒரு புதிய அணுகுமுறையில் இறங்க இந்தியா முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா எப்போதுமே நிலைநிறுத்தி வந்துள்ளது. இதன் காரணமாக, தன்னுடன் வாணிப உடன்பாடு வைத்திருப்பவர்கள் தைவானுடன் வணிக உறவுகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் சீனா கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
அப்படியே வணிக உறவுகளை வைத்துக் கொண்டாலும் தைவானை ஒரு வணிகப் பிரதேசமாக அங்கீகரித்துத்தான் உடன்பாடுகளை வைத்துக் கொள்ள முடியுமே தவிர, ஒரு தனி நாடாக அங்கீகரித்து தூதரக உறவையோ, உடன்பாட்டையோ ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் சீனாவின் கடுமையான கண்டனத்தையோ எதிர்ப்பையோ சம்பந்தப்பட்ட நாடு எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற ஓரிரு வல்லரசுகள் மட்டுமே சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுடனான உறவுகளை வலுப்படுத்தி வந்திருக்கின்றன.
இதன் காரணமாக, நீண்ட காலமாக சீனாவுடனான வாணிப உடன்பாடுகளை விரிவாக்கிக் கொண்டு வந்துள்ள இந்தியாவும், தைவானையும் ஒதுக்கி வைத்தே செயல்பட்டு வந்திருக்கிறது.
ஆனால், இப்போது இந்தியாவின் முக்கிய வெளியுறவு அதிகாரிகள் தைவானுடன் வாணிப உடன்பாடுகளை நோக்கி நகரவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றனர்.
தைவானுடனான வாணிப உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் மின்னியல் (எலெக்ட்ரோனிக்ஸ்), தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தைவானிடமிருந்து பெருமளவில் முதலீடுகளை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அவ்வாறு உலக வாணிப அமைப்பில் (WTO-World Trade Organisation) அத்தகைய உடன்பாடு ஒன்றை இந்தியாவும் தைவானும் மேற்கொண்டு பதிவு செய்தால், அதைத் தொடர்ந்து சீனாவுடனான கடும் மோதலை இந்தியா எதிர்கொள்ள நேரிடும்.
ஆனால், இப்போதே உயிர்ப்பலிகள் நேரும் வகையில் எல்லைப்புற மோதல்கள் நிகழ்ந்திருக்கும் நிலையில் இனியும் சீனாவுடன் நல்லுறவுகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை, தைவானை நோக்கி வாணிபத்தை நகர்த்துவோம் என்ற வியூகத்தை இந்திய வெளியுறவு அமைச்சின் சில அதிகாரிகள் வகுத்து அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கின்றனர்.