கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மலேசியாகினி குற்றவாளி என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு இருவருக்கும் எதிராக தேசத் துரோகச் சட்டம், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
கோலா முடா மாவட்ட காவல் துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா, ஒரே நபரால் இரண்டு தனித்தனி காவல் துறை புகார்களைப் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்தினார். புகார் அளித்தவர் கெடா குருணை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
“தேசத் துரோகத்திற்கான பிரிவு 4 (1), தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் விசாரணையை எளிதாக்க உடனடியாக அவர்களை தொடர்புகொள்வோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தை அவமதித்ததற்காக மலேசியாகினிக்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விமர்சன அறிக்கைகளை வெளிப்படுத்தியவர்களில் ஸ்டீவன் கான் மற்றும் சார்லஸ் ஆகியோரும் அடங்குவர்.