கோலாலம்பூர்: டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநில நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியது தொடர்பாக, இன்று பக்ரி நாடாளுமன்ற உறுப்பினரான இயோ பீ யின்-னிடம் மன்னிப்பு கோரினார்.
தாம் இயோவை அவதூறு செய்ததாக ஜமால் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“ஸ்கிம் மெஸ்ரா உசியா எமாஸ் நிதியை நிர்வகிப்பதில் அவர் நேர்மையாக நடந்துக் கொண்டார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ” என்று அவர் தனது மன்னிப்புக் கோரும் அறிக்கையில் கூறினார்.
“இன்றைய நடவடிக்கைகள் மற்றும் ஜமாலின் பகிரங்க மன்னிப்புடன், இந்த வழக்கு தொடர்பாக, எங்கள் கட்சிக்காரரின் நற்பெயருக்கு எதிரான களங்கம் அகற்றப்பட்டது,” என்று இயோவின் வழக்கறிஞர்கள், எஸ்.என். நாயர் மற்றும் எலிஸ் எங் கூறினர்.
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், தனது சொந்த பயன்பாட்டிற்காக அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஜமால் இயோவைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் தகுதியற்ற அரசியல்வாதி என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
தனது கட்சி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது அங்கத்தினர்களின் பார்வையில் தாம் ஓர் அரசியல்வாதியாக அவரின் நிலைப்பாட்டை இந்த குற்றச்சாட்டுகள் பாதித்ததாக இயோ கூறினார்.