கோலாலம்பூர் : சபாவின் இரண்டு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
சபா அம்னோவின் தலைவரான புங் மொக்தார் ராடின், டத்தோ முகமட் அலாமின் ஆகியோரே அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். புங் மொக்தார் கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராவார். முகமட் அலாமின் கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
எனினும் மாநில அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவு தொடரும் என்றும் புங் மொக்தார் தெரிவித்துள்ளார்.
தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்வதைத் தொடர்ந்து சில மாநில அரசாங்கங்கள் கவிழக் கூடிய நிலைமை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த சூழலில்தான் சபா மாநில அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என புங் மொக்தார் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அம்னோ முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து நாட்டில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.