Home நாடு நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை எதிர்நோக்க...

நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை எதிர்நோக்க வேண்டும்

643
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதற்கு பதிலடியாக எடுக்கப்படும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் எச்சரித்துள்ளார்.

நஜிப் தேசிய முன்னணியின் ஆலோசகருமாவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்க நினைத்தால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு, ஆனால் கட்சியின் முடிவோடு அந்த முடிவு முரண்பட்டால் பின்னர் அதற்கான பிரதிபலனையும் எதிர்நோக்கத் தயாராக வேண்டும் என நஜிப் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 8) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

“அரசாங்கத்தில் பங்கு பெற்றுக் கொண்டே மொகிதினின் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் முடிவுகளை விமர்சித்ததால் எங்களின் மீது பலர் குறை கூறினர். இப்போது எங்களின் உறுதியான முடிவைத் தெரிவித்து விட்டோம். இனியும் நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பில்லை” எனவும் நஜிப் தெரிவித்தார்.

நாட்டின் 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் வேளையில் யார் கட்சி மாறிய துரோகிகள், யார் தங்களின் பதவிகளுக்காக கட்சியின் முடிவுகளை மீறிய துரோகிகள் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்வர், அதற்கு பொதுத் தேர்தலில் பதிலடியும் கொடுப்பார்கள் என்றும் நஜிப் கூறினார்.