Home நாடு அடுத்தது அம்னோ பிரதமரா? பின்னணியில் நஜிப்பா?

அடுத்தது அம்னோ பிரதமரா? பின்னணியில் நஜிப்பா?

733
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக தனது நீதிமன்ற வழக்குகளுக்கு மத்தியிலும் சமூக ஊடகங்களில் பொதுமக்களுடன் தினமும் தொடர்பில் இருந்தவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்.

மக்கள் அவரைப் பதவியில் இருந்து வீழ்த்தினாலும், மீண்டும் சமூக ஊடகங்களின் வழியும், சளைக்காத தனது போராட்டங்களின் வழியும் மெல்ல மெல்ல பொதுமக்களில் ஒரு கணிசமான பிரிவினரை ஈர்த்திருக்கிறார் நஜிப்.

அவரின் 1 எம்டிபி ஊழல் ஒருபுறமிருக்க, அவரின் ஆட்சிக் காலமும், தலைமைத்துவ அணுகுமுறையும் சிறப்பாகவே இருந்தது எனப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நஜிப் துன் ரசாக் அண்மையில் துணைப் பிரதமராக நியமனம் பெற்ற இஸ்மாயில் சாப்ரியை நேரடியாக அவரின் அலுவலகம் சென்று கண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மொகிதின் யாசினுக்கு தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்ளும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை ஆதரிக்கும் நஜிப், அந்த முடிவுக்கு எதிராகத் துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட இஸ்மாயில் சாப்ரியைக் கண்டிக்காமல், அவருடன் அளவளாவி விட்டு வந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நேற்று வியாழக்கிழமை (ஜூலை 29) நிகழ்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நஜிப்.

“மாமன்னரின் அறிக்கையைத் தொடர்ந்து மொகிதின் யாசினும், அமைச்சர் தக்கியூடின் ஹாசானும் பதவி விலகுவதே கௌரவமான செயல்” என நஜிப் துன் ரசாக்கும் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

“மொகிதின் யாசின் தனது அரசாங்கத்தின் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் பெயரால் நடைபெறும் அனைத்து விவகாரங்களுக்கும் பிரதமரே பொறுப்பு என்பதால் அவர் பதவி விலகுவதே சரியான தீர்வாக அமையும்” எனவும் நஜிப் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் அம்னோ தலைமையில் அமையும் என்றும் அதற்குப் பின்னணியில் நஜிப் முக்கியப் பங்காற்றுவார் என்றும் ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.