Home Photo News “மலேசியக் குடும்பம் உருவாகுமா ? புதிய அரசியல் கலாச்சாரம் மலருமா?” – டத்தோ பெரியசாமி அரசியல்...

“மலேசியக் குடும்பம் உருவாகுமா ? புதிய அரசியல் கலாச்சாரம் மலருமா?” – டத்தோ பெரியசாமி அரசியல் கண்ணோட்டம்

664
0
SHARE
Ad

(“மலேசியக் குடும்பம் உருவாகுமா ? புதிய அரசியல் கலாச்சாரம் மலருமா?” என்ற பார்வையில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார், பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

நாட்டின் 9-ஆவது பிரதமராகப் பதவியேற்ற இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாம் தலைமை தாங்குகின்ற புதிய அரசாங்கம், நாட்டில் எந்தச் சமூகமும் விடுபடாமலிருப்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதுடன் நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் அரசாங்கமாகச் செயல்படும் என உறுதி கூறி அறிவித்தது நாட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

நாடு எதிர் நோக்குகின்ற கோவிட் 19 பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும்,  மேம்பாட்டுத் திட்டங்களில் சீர்குலைந்த நாட்டின் பொருளாதாரத்தைச் செம்மைப்படுத்தி நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் முதன்மை பெற வேண்டும் என்பது நாட்டு மக்களின் அவா.

#TamilSchoolmychoice

அந்த வகையிலே அரசாங்கத்தின் நோக்கங்களை அடைய அரசாங்கத்திற்கு வெளியே இருக்கின்ற மாற்றுக் கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிச் செயல்படும் சவாலை புதிய பிரதமர் இஸ்மாயில் எதிர்நோக்க முன்வருவாரா என மக்களிடையே கடந்த சில நாட்களாக கேள்விகள் எழுந்து வந்தன.

புதிதாக பிரதமர் பதவியேற்று அரசாங்கத்தை அமைக்கவிருக்கின்ற இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் தமைத்துவத்தில் நாட்டின் நலன் கருதி அமையவிருக்கின்ற செயற்குழுக்களுக்குப் பிரதமர் தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராகிய அன்வார் இப்ராகிமுக்கும் பொறுப்பினை வழங்குவது அரசியல் கலாச்சாரத்தில் ஓர் ஆக்ககரமான சிந்தனை எனலாம் .

இதன் வழி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் புதிய அரசியல் சிந்தனை உருவாகும்.
“மாற்றாந் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஒப்ப எதிர்கட்சிகளின் சிந்தனைகளை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வது ஒரு விவேகமான தலைமைத்துவம் மட்டுமல்லாது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்கும் எனலாம்.

மலேசியர்கள் நெடுங்காலமாக கட்சி அரசியல் அடிப்படையில் போட்டி, பொறாமை, ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுதல், புறம்பேசுதல், தவறான செய்திகளைப் பரப்புதல், அவதூறு கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்ற பழக்கத்திலிருந்து விடுபட்டு, ஒரு புதிய மலேசியக் குடும்ப உணர்வுகள் மலர்ந்து மேலோங்க வழி வகுக்கும். அதனால் நாட்டிலே ஒற்றுமை வளர்ந்து, அரசியல் நிலைத்தன்மை மேலோங்கி, மக்களிடையே வேற்றுமை நீங்கி மனித நேயம் மலரும்.

மேலும், பதவியேற்ற இஸ்மாயில் சப்ரி நாட்டுக்கு ஆற்றிய முதல் கொள்கையுரையில் தமது தலைமைத்துவத்தில் அமைந்த அரசாங்கம் இளைஞர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்குமென அறிவித்தார்.

அவ்வகையிலே நாட்டைச் சீரமைப்புச் செய்யும் செயற்குழுவிலே இளைஞர்களின் சமுதாயச் சிந்தனைக்கும் முக்கியத்துவம் வழங்குமென்பதால் இது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் தற்போதைய சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வாதார தேவைகளை அறிந்து ஒரு புதிய வித்தியாசமான – அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியத் திட்டங்களைச் – செயல்படுத்தும் அமைச்சரவை இஸ்மாயில் சப்ரி தலைமையில் உருவாகுமென நாடு எதிர்பார்க்கிறது.

இஸ்மாயில் சப்ரியின் திட்டங்களுக்கு அனைவரும் தோள் கொடுத்து முழு ஒத்துழைத்து தந்து – புதிய மறுமலர்ச்சி பெற்ற மலேசியக் குடும்பம் – உருவாக வேண்டும் என்பதே அனைத்து மலேசியர்களின் விருப்பமாகும்.

– டத்தோ மு.பெரியசாமி