காபூல் : ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் இன்று சனிக்கிழமை செப்டம்பர் 11-ஆம் தேதி பதவியேற்க ஆயத்தமாக இருந்ததாகவும், ஆனால், இன்று செப்டம்பர் 11 – அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த நாள் என்பதால், நட்பு நாடுகளின் நெருக்குதல் காரணமாக, அந்தப் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001-ஆம் ஆண்டில், இதே செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானம் வழியான தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்தேறி உலக வரலாற்றின் பாதையையே மாற்றியமைத்தன.
தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தாக்குதல்களைத் திட்டமிட்டார் என்பதற்காக, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி அந்நாட்டைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.
அங்கு 20-ஆண்டுகளாகத் தனது படைகளை நிறுத்தியிருந்த அமெரிக்கா ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றினர். அவர்களின் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன.
யார் இந்த “முல்லா அப்துல் கானி பரதர்?”
ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் அதன் தலைவர் முல்லா அப்துல் கானி பரதர் தலைமையில் அமைக்கப்படுகிறது.
சுவாரசியமானப் பின்னணியைக் கொண்டவர் முல்லா அப்துல் கானி பரதர். 1980-ஆம் ஆண்டுகளில் இரஷியா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, அதனை எதிர்த்துப் போராட முஜாஹீதின் போராளிகள் குழு உருவாக்கப்பட்டது. அதில் இணைந்து போராடிய முல்லா அப்துல் கானிக்கு, அப்போது அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை வழங்கியது.
பின்னர் தாலிபான் போராளிகள் குழுவுக்கு மாறி அமெரிக்காவை எதிர்த்து 2000-ஆம் ஆண்டுகளில் போராடினார் முல்லா அப்துல் கானி.
2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்ட முல்லா அப்துல் கானி கியூபாவில் உள்ள குவாண்டனமோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவால் விடுதலை செய்யப்பட்டதும் 2018-இல் மீண்டும் தாலிபான் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் முல்லா அப்துல் கானி.
இன்றைக்கு, ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருக்கிறார். அதைவிட முக்கியமாக, எந்த அமெரிக்கா தன்னை சிறையில் தள்ளியதோ, அதே அமெரிக்காவின் உளவுத் துறைத் தலைவரைச் (சிஐஏ) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இப்படியாக, சினிமாப் படத்தைவிட வித்தியாசமான, சுவாரசியமான பின்னணியைக் கொண்டவராக முல்லா அப்துல் கானி திகழ்கிறார்.
6 நாடுகளுக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு
இதற்கிடையில் ஆப்கானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஷியா, ஈரான், சீனா, கத்தார், பாகிஸ்தான் ஆகிய 6 நாடுகளுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
இன்று செப்டம்பர் 11-ஆம் தேதி நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலின் நினைவு நாளில் புதிய ஆப்கான் அரசாங்கம் பதவியேற்பது “மனிதாபிமான” செயலாக இருக்காது என கத்தார் போன்ற நட்பு நாடுகள் தாலிபான்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி இன்னொரு நாளில் ஆப்கான் புதிய அரசாங்கம் முல்லா அப்துல் கானி தலைமையில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal