Home நாடு “மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

914
0
SHARE
Ad

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய மலேசிய தின வாழ்த்துச் செய்தி

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமிதத்தோடு இந்த மலேசிய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது தனித்துவமிக்க வாழ்க்கை முறை, மலேசியர்களின் பண்பாட்டையும், புரிந்துணர்வையும் உலகெங்கும் உரக்கச் சொல்கிறது.

பொதுவாக மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள சாப்பாடு, இரண்டு மூன்று நாட்களுக்குள் சலித்துவிடும். காரணம் நாம் காலையில் நாசி லெமாக், மாலையில் மீ கோரேங், மதியம் வாழை இலை உணவு என்று அனைத்து இனத்தவரின் உணவையும் ருசித்து, ரசித்துச் சாப்பிட்டு, அதற்குப் பழக்கப்பட்டு விட்டோம். இந்த ஒன்றிப் பிணைந்த வாழ்க்கையே நமது தனிச்சிறப்பு.

#TamilSchoolmychoice

நாம் அனைவரும் ஓரே மலேசியர்கள் எனும் உணர்வோடு இதுவரை வாழ்ந்து வந்தாலும், தற்போது “மலேசியக் குடும்பம்” என்பது புதிய அரசாங்கத்தின் தாரக மந்திரமாகவும், தார்மீகக் கொள்கையாகவும் இருந்து வருவது அந்த உணர்வை மேலும் மேலோங்கச் செய்கிறது.

பல்வேறு திட்டங்கள் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை முறை சீர் பெறவும், வாழ்வாதாரம் நிலைத்திருக்கவும் மலேசியக் குடும்பமாக நடப்பு அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காக மக்களை திசை திருப்பவும், மூளைச் சலவை செய்யவும் முற்படலாம். அதைக் கண்டு மலேசியர்கள் குழம்பி விடக்கூடாது. தெளிந்த சிந்தனையோடு எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து, அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்

நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் அதே வேளையில், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பண்பும், புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்திருப்பது முக்கியம்.

அனைத்து மலேசியர்களும் தன்னம்பிக்கையுடன் கொரோனா தொற்றிலிருந்தும், பொருளாதார சிக்கலிலிருந்தும் விரைவில் விடுபடுவோம் என்ற நம்பிக்கையோடு ஒற்றுமையாய் வாழ்வோம், ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” எனும் தமிழரின் வாழ்வியல் என்றுமே பொய்த்ததில்லை.

வாழ்க மலேசியா, வளர்க மலேசியர்.

அன்புடன்,

மக்கள் நலன்பேணும் மனிதவள அமைச்சர்
உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal


Comments