Home நாடு “ஒற்றுமை-மத, இன நல்லிணக்கம் – நமது வெற்றிக்குக் காரணங்கள் – விக்னேஸ்வரன் மலேசியா தின...

“ஒற்றுமை-மத, இன நல்லிணக்கம் – நமது வெற்றிக்குக் காரணங்கள் – விக்னேஸ்வரன் மலேசியா தின வாழ்த்து

1297
0
SHARE
Ad

மலேசிய தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

“ஒற்றுமையும், மத, இன நல்லிணக்கமுமே நமது வெற்றிக்குக் காரணங்கள்”

இன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக சபா, சரவாக் வாழ் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய தினம் அல்லது சுதந்திர தினம் என்ற கொண்டாட்டம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் நமது நாட்டுக்கு மட்டும், சுதந்திர தினம் என்றும் மலேசியா தினம் என்றும் இரண்டு சிறப்பு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் வித்தியாசமான சூழல் உண்டு.

அதற்கான பின்னணியாக வரலாற்று காரணங்களும் நாம் அறிந்ததுதான். சபா, சரவாக் மாநிலங்களும் நம்முடன் 1963-இல் இணைந்ததன் காரணமாக மலேசியா என்ற நாடு உதயமாகியது. அதை நினைவு கூரும் விதமாக மலேசியா தினம் என்ற சிறப்புக் கொண்டாட்டமும் பின்பற்றப்படுகிறது.

#TamilSchoolmychoice

சபா, சரவாக் மாநிலங்களின் இயற்கை வளங்களும், அந்த மாநிலங்களின் மக்களின் பங்களிப்பும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பலவிதங்களில் உதவியுள்ளது.

அதே வேளையில் நமது மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல், பாதுகாப்பு, மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் காரணத்தால், சபா சரவாக் மாநிலங்கள் இன்றைக்கு அபரிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அவர்களும் நம்முடன் இணைந்து அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

1963-இல் ஒன்றாக இணைந்து மலேசியா என்ற நாடு உதயம் கண்டு, 58 ஆண்டுகளைக் கடந்து இன்று பல முனைகளிலும் உலகின் வளர்ச்சியடைந்த, நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறோம்.

நமது நாட்டின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படைக் காரணங்கள் நம்மிடையே நிலவும் ஒற்றுமையும், மத, இன நல்லிணக்கமுமே என்பதை நாம் என்றைக்கும் மறந்து விடக் கூடாது. நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வுடனேயே நாம் செயல்படுவதால்தான் நம்மால் அனைத்துலக அரங்கில் முன்னேற முடிகிறது. அதன் காரணமாக, நாட்டில் அமைதியும் நிலவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் “மலேசியக் குடும்பம்” என்ற சித்தாந்தத்தை முன்மொழிந்து அனைவரையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார், நமது புதிய பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி அவர்கள்.

நாம் அனைவரும் மலேசியர்கள், நமது ஒற்றுமையே நமது பலம் என்பதை நாம் இன்றைய மலேசிய தினத்தில் உணர்ந்து கொண்டால், அதற்கேற்ப நடை போட்டால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, நாட்டின் வளர்ச்சியிலும் சரி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்போம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள்.

அன்புடன்,

டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்