காஜாங் : காஜாங் பொது மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகலில் ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை மருத்துவமனை வளாகத்தில் நேரில் பார்த்த மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சிதான் அது.
கைரி ஜமாலுடின் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீர் வருகையை மேற்கொண்டு நேற்று காஜாங் மருத்துவமனை வந்தார். தனது மெய்க்காப்பாளர் மற்றும் அமைச்சு அதிகாரி ஒருவர் ஆகியோருடன் மட்டும் வந்த அவர் அந்த மருத்துவமனையை சுற்றிப் பார்த்து அங்குள்ள வசதிகளையும் நேரில் கண்டறிந்தார்.
அந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, இணையவாசிகளின் (நெட்டிசன்ஸ்) பாராட்டுகளையும் பெற்றது.
சாதாரண ஜீன்ஸ், எளிமையான மேல் சட்டை அணிந்து வந்திருந்தார் கைரி.
இப்படியாக திடீரென முன்ன்றிவிப்பு ஏதுமின்றி வருகை மேற்கொண்டு நேரில் பிரச்சனைகளை கண்டறியும் அவரின் நடவடிக்கை குறித்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இதுபோன்ற திடீர், முன்னறிவிப்பு இல்லாத வருகையினால், கொவிட்-19 பாதிப்புகளின் காலகட்டத்தில் உண்மையான நிலைவரங்களையும், பிரச்சனைகளையும் அமைச்சர் ஒருவர் நேரில் கண்டறிய முடியும் – அதற்கான தீர்வுகளை காண முடியும் – என்றும் இணையவாசிகள் கைரியின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal