கோலாலம்பூர் : தன்னை சட்டத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பில் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி நீதிமன்றத்தில் துன் மகாதீருக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கில் சமரசத் தீர்வுக்கான முயற்சிகள் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான முழு நீதிமன்ற விசாரணை இனி நடைபெறும்.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டால் நீக்கப்பட்டது தொடர்பில் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு தொடர்பில் இரு தரப்புகளும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நல்லது என நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது அறிவுறுத்தியிருந்தது.
எனினும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து வழக்கைத் தற்காத்து நடத்தவே விரும்புகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கிற்கான நிர்வாகம் மீதான விசாரணை இன்று புதன்கிழமை (செப்டம்பர் 29-ஆம் தேதி) நடைபெற்றது.
இன்றைய விசாரணைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அபாண்டியின் வழக்கறிஞர் அப்துல் ஷூக்கோர் அகமட் சட்டத் துறை அலுவலகம் இந்த வழக்கில் சமரசத் தீர்வு காண அரசாங்கம் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கிற்கான விசாரணைத் தேதிகள் அடுத்தாண்டு ஏப்ரல் 18 முதல் 22 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த வழக்கு நிர்வாக விசாரணை நவம்பர் 5-இல் நடைபெறும்.
அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரும் இந்த நீதிமன்ற முடிவை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அபாண்டி அலியின் வழக்கு விவரம்
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் முகமட் அபாண்டி அலி, 2018-இல் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தார்.
2018-இல் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் தன்னை பதவி நீக்கம் செய்தது சட்டத்திற்கு எதிரானது என்ற காரணத்தினால் அவர் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.
2015-இல் ஜூலை 27- ஆம் தேதி தொடங்கி 2018 ஜூலை 26 வரை மாமன்னரின் ஒப்புதலுடன் சட்டத்துறைத் தலைவராக அபாண்டி நியமிக்கப்பட்டார்.
2018-இல் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று, அப்போதைய அரசாங்கத் தலைமைச் செயலாளர் (டான்ஸ்ரீ அலி ஹம்சா), மாமன்னர் தனது நியமனத்தை 2018 ஜூலை 27 முதல் நீட்டிக்க ஒப்புக் கொண்டதாகவும், 2018 மே 7 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தனது சேவை நீட்டிப்பைப் பெற்றதாகவும் அபாண்டி அலி தனது வழக்கில் தெரிவித்திருக்கிறார்.
எனவே, துன் மகாதீர் தலைமைத்துவத்தின் போது தன்னை பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறி இழப்பீட்டுத் தொகையைக் கோரி அபாண்டி அலி வழக்கு தொடுத்திருக்கிறார்.
ஆனால், அவரின் பதவி நீக்கம் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டது என சட்டத் துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.