Home நாடு சரவணன் 2-வது தவணைக்கு மஇகா துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு

சரவணன் 2-வது தவணைக்கு மஇகா துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு

484
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) மஇகா தலைமையகத்தில் கட்சியின் தேசிய, மாநில நிலைப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் யாரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யாததால், நடப்பு துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஏகமனதாக மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனித வள அமைச்சராகவும் இருக்கும் சரவணனுக்கு நாடு தழுவிய அளவில் மஇகாவில் இருந்து வரும் ஆதரவையும், செல்வாக்கையும் புலப்படுத்துவதாக இந்தத் தேர்வு அமைந்திருக்கிறது.

சரவணன் கடந்து வந்த அரசியல் பாதை

#TamilSchoolmychoice

மிக இளம் வயதிலேயே மஇகா அரசியலில் தீவிரம் காட்டியவர் சரவணன். மைக்கா ஹோல்டிங்ஸ் அலுவலகத்தில் சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவரின் வாழ்க்கைப் பின்புலமும், ஏழ்மையையும், சாதாரணப் பின்னணியையும் கொண்டதாகும். தனது கடுமையான உழைப்பாலும், சுறுசுறுப்பானப் பணிகளாலும் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் அபிமானத்தைப் பெற்றார் சரவணன்.

தலைநகர் ஜாலான் பிளெட்சர் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற சரவணன், தமிழை ஆழமாகக் கற்றறிந்த காரணத்தால் – தமிழ் இலக்கியங்கள், சமய நூல்கள் ஆகியவற்றின் மீது கொண்டிருந்த காதலால் – மேடையிலே, தங்கு தடையின்றி சரளமாக அழகான மொழிநடையில் உரையாற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

அவரின் மேடைப் பேச்சின் திறன் இன்றைய நிலையில் மேடைப் பேச்சுக் கலையில் புகழ்பெற்ற தமிழ் நாட்டிலேயே பிரசித்தம் என்பதிலிருந்து அவரின் அந்தத் திறனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மஇகாவில் உறுப்பினராக அடிமட்டத்திலிருந்து உழைத்து, படிப்படியாக, கிளைத் தலைவராகவும், தொகுதித் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும், மத்திய செயற்குழு உறுப்பினராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார் சரவணன்.

அரசாங்கப் பதவிகள் அவருக்குக் கிடைத்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தபோதும், தனது கடுமையான உழைப்பாலும், மக்களுடனான அணுகுமுறைகளாலும் அந்தப் பதவிகளிலும் தனது முத்திரையைப் பதித்தார். மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

2008 முதல் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக கடந்த 3 தவணைகளாக அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறார்.

மனிதவள அமைச்சராக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளிடம் இருந்தும், இந்திய சமூகத்திலிருந்தும் பரவலான ஆதரவை, தனது செயல் முறைகளால் பெற்றிருக்கிறார் சரவணன்.

2018-ஆம் ஆண்டில் மஇகா தேசியத் துணைத் தலைவராகத் தேர்வு

மஇகா தேசிய உதவித் தலைவராகப் பதவி வகித்து வந்த சரவணன் 2015-இல் நடைபெற்ற கட்சித் தேர்தலில் முதன் முதலாக துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். எனினும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியிடம் தோல்வியடைந்தார்.

2018 கட்சித் தேர்தலில் மீண்டும் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரவணன், இந்த முறை வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மஇகா, தலைமைத்துவ மாற்றத்தையும் கண்டது. தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரவணனின் நன்றி

தன்னை ஒரு மனதாகத் தேர்வு செய்து, ஆதரவளித்த கட்சித் தலைமைக்கும், அனைத்து கிளைத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் சரவணன்.

“கட்சித் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் ஆசியுடனும், கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்கள் முதல் கட்சிப் பொறுப்பாளர்களின் வற்றாத ஆதரவுடனும் தனது கட்சி, மக்கள் பணிகள் தொடரும் என்ற உறுதிமொழியை வழங்குகிறேன்” என்றும் சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

-இரா.முத்தரசன்