கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தது தொடர்பிலான கட்டுரைகளை எழுதியவர் லலிதா குணரத்தினம்.
அதைத் தொடர்ந்து அவர் மீதும் காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டன.
அந்தப் புகார்களை விசாரித்த காவல் துறை அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் இது அசாம் பாக்கியின் முகத்தில் அறை விழுந்ததற்கு நிகரானது எனக் கூறியுள்ளார்.
இனியும் தாமதிக்காமல் அசாம் பாக்கி விடுமுறையில் செல்லவேண்டும் என லிம் கிட் சியாங் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
லலிதாவின் பதில் சத்தியப் பிரமாணம்
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான ஊழல் புகார்கள் தனக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும் என லலிதா குணரத்னம் ஏற்கனவே, பதில் சத்திய பிரமாண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அசாம் பாக்கி, லலிதாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அந்த வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பதில் சத்தியப் பிரமாண அறிக்கையில்தான் லலிதா மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
தனக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான போராட்டவாதியான லலிதா, அசாம் பாக்கியின் பங்குரிமைகள் குறித்து கட்டுரைகள் எழுதி, அந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவராவார்.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி லலிதாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த அசாம் பாக்கி, அந்த வழக்கின்வழி 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியிருக்கிறார்.