கோலாலம்பூர் : அடுத்த துணைப் பிரதமராக தான் நியமிக்கப்பட பெர்சாத்து கட்சி பரிந்துரைத்துள்ளதாக எழுந்திருக்கும் ஆரூடங்கள் குறித்த கேள்விகளை அஸ்மின் அலி தவிர்த்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரை பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் அந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கொடுக்காமல் தவிர்த்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி நியமிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பரிந்துரைத்த ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர் அஸ்மின் அலி மட்டுமே எனத் தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அகமட் பைசாலுக்குப் பதிலாக அஸ்மின் அலி துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் பெர்சாத்து கட்சியில் அதிருப்தி அலைகளை எழுப்பியிருக்கிறது.
எனினும், அந்தப் பரிந்துரைக்கு அம்னோ கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் பிரதமர் தற்போதைக்கு யாரையும் துணைப் பிரதமராக நியமிக்க மாட்டார் எனக் கருதப்படுகிறது.
அவ்வாறு துணைப் பிரதமர் நியமனம் கிடைக்காவிட்டாலும் பெர்சாத்து தொடர்ந்து பிரதமரை ஆதரிக்கும் என பெர்சாத்து உதவித் தலைவர் ரோனால்ட் கியாண்டி அறிவித்திருக்கிறார்.