கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கத் தவறினால் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக தேசிய முன்னணி துணைத் தலைவரும். அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹாசான் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (14 ஆகஸ்ட்) கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய முன்னணியின் மகளிர் மாநாட்டில் பேசிய முகமட் ஹாசான் “அடுத்த பொதுத் தேர்தல், தேசிய முன்னணி கூட்டணிக்கு செய் அல்லது செத்து மடி என்பது போன்றது” என்று கூறினார்.
“எங்கள் முன்னுரிமை அடுத்த தேர்தல். நாம் வெல்ல வேண்டும். நாங்கள் தோற்றால், துணைத் தலைவர் பதவி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். தேசிய முன்னணி (தே.மு) வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் நாம் திரும்பி வருவது கடினம். புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்ற முடியும் என்பதை நிரூபிக்க இதுவே கடைசி வாய்ப்பு” என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி தெரிவித்தது.
“வரவிருக்கும் பொதுத் தேர்தல் தேசிய முன்னணிக்கு வித்தியாசமானதாகும். பக்காத்தான் ஹராப்பான் – பெரிகாத்தான் நேஷனல் – இரண்டையும் தே.மு. எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், வரும் பொதுத் தேர்தல் வேறு எந்தத் தேர்தலையும் போல இருக்காது” என தேசிய முன்னணியின் தேர்தல் இயக்குநருமான அவர் மேலும் கூறினார்.