Home Photo News ‘துணிவு’: திரைப்பட விமர்சனம் – காதில் செம பூச்சுற்றல்; தேவையில்லாத பிரம்மாண்ட செலவுகள்!

‘துணிவு’: திரைப்பட விமர்சனம் – காதில் செம பூச்சுற்றல்; தேவையில்லாத பிரம்மாண்ட செலவுகள்!

801
0
SHARE
Ad

தமிழ் நடிகர்களில் அஜித்-விஜய் இருவருமே தன்னம்பிக்கை கொண்ட போராளிகள். இன்றைக்குத் தங்களுக்கு இருக்கும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல்வேறு அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் கடந்து அடைந்தவர்கள். அதனால்தான் இருவருமே இந்த முறை மோதிப் பார்த்து விடுவோம் என்பதுபோல ஒருவருக்கொருவர் பின்வாங்காமல் ஒரே பொங்கல் நாளில் தங்களின் படங்களைத் திரையிட்டு தமிழ் நாட்டில் கலகலப்பையும், கலவரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தன் சொந்த வாழ்க்கை சுலோகம் போல, ‘துணிச்சலான முடிவெடுக்கவில்லை என்றால், புகழ் அடைய முடியாது’ என்ற பொருளில் ‘No Guts No Glory’ என்னும் முழக்கத்துடன் துணிவு படத்தில் களமிறங்கியிருக்கிறார் அஜித்.

துணிவு படத்தில் அஜித் – சமுத்திரகனி
#TamilSchoolmychoice

வாரிசுக்குப் பயந்து துணிவு, பின்வாங்கும், வேறொரு தேதியில் வாரிசுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்ற ஆரூடங்களைப் பொய்யாக்கும் வண்ணம், என்ன ஆனாலும் சரி! பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் அஜித்.

சரி! அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப படமும் அமைந்திருக்கிறதா? என்றால், இல்லை என ஏமாற்றமான பதிலைத்தான் தரவேண்டியதிருக்கிறது.

பலவீனமான கதை – விறுவிறுப்பான திரைக்கதை

அடிப்படையில் ஒரு பலவீனமான கதையை – நம்ப முடியாத சம்பவங்களோடு – சாதாரண இரசிகர்கள் தங்களோடு பொருத்திப் பார்க்க முடியாத நிகழ்வுகளோடு – உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். முன்னாள் பத்திரிகையாளர் என்பதால் திரைக்கதையில் நுணுக்கமாக விரிவாக்கம் செய்வதற்காக (detailing) எப்போதும் பாராட்டப்படுபவர்.

அஜித்துடன் மஞ்சு வாரியர்

ஆனால், ஒரு வங்கிக்குள் – அதுவும் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வரும் ஒரு வங்கிக் கிளையில் – 25 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருக்கிறது என்ற பூச்சுற்றலை நமது காதுகளில் முழம் முழமாகத் தொடுத்திருக்கிறார் இயக்குநர்.

சிறுசிறுகாட்சிகளாக அடுத்தடுத்து சம்பவங்களை நகர்த்துவதன் மூலம் திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் வினோத். ஜிப்ரானின் பின்னணி இசை அந்தத் திரைக்கதைக்கு மேலும் பரபரப்பைக் கூட்ட, ஏதோ நடக்கப் போகிறது என நம்மை கண்கொட்டாமல் திரையைப் பார்க்க வைப்பதில் மட்டும் வினோத்தின் திறமை தெரிகிறது.

வங்கியைக் கொள்ளையடிக்க ஒரு குழு காவல் துறை அதிகாரியுடன் திட்டம் தீட்ட – அவர்கள் வங்கியை முற்றுகையிடும்போது அங்கு எதிர்பாராமல் அஜித் தனிமனிதனாக வங்கிக்குள் அமர்ந்திருக்கிறார். அவர் ஏன் உள்ளே வந்திருக்கிறார் என்பதற்கு இன்னொரு பின்னணிக் கதை சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இன்னொரு குழுவும் அதே வங்கியில் கொள்ளையடிப்பதற்காக உள்ளே நுழைகிறது. இந்தக் குழுக்களின் மோதல்களினால், வங்கிக்குள் நடக்கும் துப்பாக்கிச் சண்டைகள் மிக மிக நீ…….ளம்!

வழக்கம்போல் எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும், அஜித் காயம்படாமல் தப்பிக்கிறார். அவர் திருப்பிச் சுட்டால் மட்டும் எதிரிகள் பொத் பொத் என்று விழுகிறார்கள். 1960-ஆம் ஆண்டுகளின் ஜேம்ஸ்பாண்ட் பாணியை இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படம் தொடங்கியதிலிருந்து உள்ளேயும், வெளியேயும் ஒரே பிணக் குவியல்தான்! ரஷியா-உக்ரேன் போரில்கூட இத்தனை பிணங்கள் விழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் மட்டும் பாராட்டு பெறுகிறார் இயக்குநர்.  படத்தின் மைய இழையான சாதாரண மக்களிடம் கடன்களையும் கடன்பற்று அட்டைகளையும் (கிரெடிட் கார்ட்) திணிக்க வங்கிகள் மேற்கொள்ளும் இனிப்பு தடவிய பரிந்துரைகளையும், பின்னர் அதே கடன்களை வசூலிக்க அவர்கள் கையாளும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் சாடியிருக்கும் விதத்திலும் மதிப்பெண்கள் பெறுகிறார்.

மற்றபடி இத்தனை சிறிய கதையைச் சொல்ல இத்தனை ஆர்ப்பாட்டங்கள், பிரம்மாண்டங்கள், தாய்லாந்தில் விரட்டல்கள், நடுக்கடலில் கப்பலோடும், விரைவுப் படகுகளோடும் மோதல்கள், ஹெலிகாப்டர்கள் – இவையெல்லாம் வீண் செலவுகளுக்காக ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இறுதிவரை அஜித்தை வில்லனாக – ஆனால் நல்ல மனிதனாகக் காட்டியிருக்கிறார்கள். இதிலும் அவருக்கு காதல் ஜோடி இல்லை. வெளியில் இருந்து அவருக்கு தொலைத் தொடர்பு கேமராக்கள் மூலம் உதவி செய்யும் மஞ்சு வாரியர் மனைவியா, காதலியா, அல்லது குற்றச் செயலுக்காக மட்டும் இணைபவரா என்பதையும் விளக்கமாகக் காட்டவில்லை.

முதலமைச்சரிலிருந்து மத்திய அமைச்சர்கள் வரை எல்லோரும் வங்கியில் பதுக்கப்பட்ட பணத்தில் பங்கு கேட்பதும் நம்பும்படியாக இல்லை. இப்படியாக பல ஓட்டைகளுடன், அஜித் இரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலும், பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக மட்டுமே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் சிறப்பம்சங்கள்

அவ்வப்போது கொஞ்ச நேரமே வந்து முகம் காட்டினாலும் மஞ்சு வாரியர் கவர்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் திறமையைக் காட்டுகிறார். சமுத்திரகனி காவல்துறை உயர் அதிகாரியாக மிடுக்கான நடிப்பில் மிளிர்கிறார்.

மற்றபடி நகைச்சுவைக் காட்சிகளும் இல்லை. காதல் காட்சிகளும் இல்லை என்பதால் வறண்ட பாலைவனம்போல் நகரும் படம் முழுக்க சண்டைக்காட்சிகள், விரட்டல்கள் என்பதால் பல இடங்களில் போரடிக்கிறது.

படத்திற்கு ஆறுதல் கூட்டும் இன்னொரு அம்சம் பத்திரிகையாளராக வரும் மோகனசுந்தரம். பட்டிமன்றங்களில் தன் நகைச்சுவையால் சிரிப்புத் தோரணங்கள் கட்டியவர், இதிலும் கைதேர்ந்த நடிகரைப் போல் அனாயசமாக மூத்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டுகிறார். ஊடக உலகின் பின்னணி வேடங்களையும் தன் வசனத்தால் துகிலுரித்துக் காட்டுகிறார்.  வாய்ப்புகள் இனி அவருக்கு குவியலாம். படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக அடுத்த சில பட்டிமன்றங்களில் அள்ளி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

ஜிப்ரானின் பின்னணி இசை கவர்ந்தாலும், பாடல்கள் ஈர்க்கவில்லை.

உண்மையிலேயே ஒரு வங்கிக் கொள்ளை நடந்தால் பாதுகாப்புத் துறையினரும், அரசுத் துறையினரும் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை விரிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளரின் திறனும் வெளிப்படுகிறது.

அஜித்துக்காகவோ – பொங்கல் பிரம்மாண்டம் என்பதற்காகவோ மட்டும் – ஒருமுறை பார்க்கலாம்.

அடுத்த படத்தில் அஜித் எல்லா அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது!

– (இரா.முத்தரசன்)