Home நாடு “நாமும் மண்ணின் மைந்தர்கள்தான் – பக்காத்தானுக்கு வாக்களிப்போம்” – டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

“நாமும் மண்ணின் மைந்தர்கள்தான் – பக்காத்தானுக்கு வாக்களிப்போம்” – டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

720
0
SHARE
Ad
டான்ஸ்ரீ க.குமரன்

கோலாலம்பூர் : “மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் உரிமைப் பெற்றிருக்கும் மலேசியர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்களே! வந்தேறிகள் அல்லர்” என முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் இன்று விடுத்த அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.

“அண்மை காலமாக நாட்டின் மூத்த அரசியல்வாதியான துன் மகாதீர் மலேசிய மக்களை நாட்டுக்காரர்கள்-வந்தேறிகள் என்று பிரித்து தனிமைப்படுத்தும் போக்கைக் கண்டிக்கவேண்டும். கால் நூற்றாண்டு காலம் இரண்டு முறை நாட்டின் பிரதமராக அமைச்சராக ஆட்சி நடத்தி, பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வைப்புத் தொகையை இழந்த ஒருவர் தமது கடந்த கால தவறுகளையும், இந்திய வழித்தோன்றல் என்ற தமது அடையாளத்தை மறைப்பதற்கும் தம்மை மலாய் இனக்காவலன் வேடம்போட்டு மலேசியக் குடிமக்களை பிரித்தாள நினைக்கும் முயற்சிக்கு இந்திய வாக்காளர்கள் துணை போய்விடக்கூடாது” என்றும் குமரன் தன் அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

1969-ஆம் ஆண்டு எழுதிச் சென்ற கறைபடிந்த வாலாற்றிற்குப்பின், இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்ற கோட்பாட்டினை இலக்காகவும் பேரரசர் தலையிலான மக்களாட்சி முறையினை வழிகாட்டலாகவும் கொண்டு, இன இணக்கம், சமய புரிந்துணர்வுடன் வாழ்ந்துவரும் மக்களிடையே வேற்றுமைகளை விதைத்து வாக்கு வேட்டை நடத்த முயல்வோரின் குறுகிய எண்ணங்கள் வெற்றிபெற்றால் நாட்டில் பூசலும் புகைச்சலும் ஏற்பட்டுவிடும் என்றும் குமரன் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

“உலக மக்களின் வாழ்வியலை ஆய்வு செய்த மானுடவியலாளர்கள் இன, சமய, பண்பாட்டு கலப்பில்லாத தனித்த்ன்மை உடையவர்களை காண்பதரிது என்று கூறியுள்ளனர். இவ்வுலகையும் மக்களையும் படைத்தவன் இறைவன் என்பது எல்லா சமயங்களின் பொதுவான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடைவில் பார்க்கிறபோது இவ்வுலகில் வாழ்கிற நாம் அனைவரும் துன்மகாதீர், டான்ஸ்ரீ ஹஜி ஹடி அவாங், டான்ஸ்ரீ முகைதீன் உட்பட அனைவரும் வந்தேறிகள்தான்”  எனவும் குமரன் சாடினார்.

தன்னை, மலாய்க்காரர்களின் காவலன் என்றும் மற்றவர்கள் வந்தேறிகள் என்று மீண்டும் மீண்டும் கூறி மலாய் சமூகத்திடம் தாம் இழந்துவிட்ட செல்வாக்கினை மீட்டெடுக்க முயலும் துன் மகாதீரின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய வாக்காளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் குமரன் கேட்டுக் கொண்டார்.

“நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தால் வந்தேறிகள் நாட்டைப் பறித்துக் கொள்வார்கள், மலாய்க்கார அரசர்கள் அரசுரிமை இழந்துவிடுவார்கள் என அச்சமூட்டி எச்சரித்து பேசிவரும் துன் மகாதீர் போன்றோருக்கு நாவடக்கம் தேவை. கூட்டரசு மலாயா, சபா, சரவாக் மூன்று நாடுகள் இணைந்து உருவானதுதான் மலேசியா. மேற்கு மலேசியா என்று அழைக்கப்படும் நமது நாட்டின் பெயர் (PERSEKUTUAN TANAH MELAYU – FEDERATION OF MALAYA). மேற்கு மலேசியா மலாய் நாடுதான், தானா மிலாயுதான். இது அரசியல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அத்துடன், இஸ்லாமிய சமயத்தை தேசிய சமயமாகவும், மலாய் மொழியை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொண்டு மலேசியர்கள் தங்கள் சமயத்தைப் பேணி, தாய்மொழியில் பேசி இன இணக்கத்துடன் அறுபத்து ஆறு ஆண்டுகளாக சுதந்திரக்காற்றை சுவாசித்து வரும் மக்களிடையே இன-மொழி-சமய சர்ச்சைகளை உருவாக்கி குறுகிய அரசியல் லாபம் தேட முயலும் துன் மகாதீர் போன்றவர்களைப் புறந்தள்ளி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் நம்பிக்கை கூட்டணி மீது நம்பிக்கை வைத்து நமபிக்கை கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் இந்திய சமுதாயம் வாகளிக்கவேண்டிய காலகட்டம் இது.
இந்நாட்டின் உருவாக்கத்திற்கு, சுதந்திரத்திற்கு பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு உழைத்தவர்களை வந்தேறிகள் எனக் குறிப்பிடுவது அறிவுடைமையாகாது. , இந்நாட்டின் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக, தலைவர்களாக, சட்ட மன்ற உறுப்பினராக, துணை முதலமைச்சராக,மாநில ஆட்சிக்குகுழு உறுப்பினர்களாக, மேலவை உறுப்பினராக, தலைவராக, துணைத்தலைவராக, மக்களவை உறுப்பினராக, துணை சபா நாயகராக, ஐக்கியநாட்டு சபை உறுப்பினராக, நிரந்தரப் பிரதிநிதியாக, அமைச்சராக, துணை அமைச்சராக, பேங்க் நெகரா தலைவராக, கடற்படடைத் தளபதியாக, காவல்துறை, விளையாட்டுத்துறை, அனைத்துலக தொழிற் சங்கத்துறை, அரசாங்க பொதுச் சேவைத் துறை, இராணுவம், காவல்படை சேவைகளில் பணியாற்றிய – பணியாற்றி வருகிற இந்தியர்கள் வந்தேறிகளா? அல்லது வந்தேறிகள் அத்தகைய பொறுப்புகளில் இருக்கமுடியுமா?” என்றும் குமரன் கேள்வி எழுப்பினார்.

துன் மகாதீரின் கூற்றுப்படி, வந்தேறியான அவரே நாட்டின் பிரதமராக இருகும்போது, மேற்கண்ட பொறுப்பபான பதவிகளை வகித்தவர்களை வந்தேறிகள் என்று அவர் கூறுவது அறிவுடைமையாகாது எனவும் சுட்டிக் காட்டிய குமரன், நாடு சுதந்திரம் பெற்றது முதல் “Negaraku Tanah tumpahnya darahku Rakyat hidup Baersatu dan Maju, Rahmat Bahagia Tuhan kurniakankan Raja kita Selamat bertakhta. “(இது என் நாடு, நாட்டிற்காக இரத்தம் சிந்துவேன். இந்நாட்டை நீதி-நேர்மையுடன் அரசாள பேரரசருக்கு இறைவன் நீண்ட ஆயுளைத் தருவானாக) என்ற பொருள்படும் நாட்டுப் பண்ணை பாடுவதுடன் Dimana Bumi dipijak disitu langit dijunjung என்ற முதுமொழிக்கிணங்க வாழ்கின்ற மலேசியர்களை பிரித்தாள நினைக்கும் துன் மகாதீர் போன்றவர்களின் அர்த்தமற்ற – மக்களை பிரித்தாள நினைப்போரின் – அரசியல் லாபம் தேடும் – உளறல்களை சிந்தித்து இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் குமரன் கேட்டுக் கொண்டார்.

தனது அறிக்கையில் குமரன் பின்வருமாறும் மேலும் தெரிவித்தார்:

“பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் கூட்டணி வேட்பாளரையே பரப்புரை மேடையில் ஏற அனுதிக்காத – நம்மை வந்தேறிகள் என்று வசைபாடுபவர்கள் – தப்பித் தவறி நாளை ஆட்சிக்கு வந்தால் நம் நிலை என்ன ஆகும் என்பதை நன்றாக சிந்திப்போம்.”

“எனது எழுபது ஆண்டுகால அரசியல் பயணத்தில் பெற்ற அனுபவத்தில், ஆகஸ்ட் 12 நடைபெறவிருக்கும் ஆறு மாநில சட்ட மன்ற தேர்தல்கள் இந்தியர்கள் நம்பிக்கைக் கூடணிக்கு அளிக்கும் வாக்குகளினால் தங்கள் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். இந்த நம்பிக்கை நிறைவேற வேண்டுமென்றால் நம்பிக்கைக் கூட்டணிக்கே இந்தியர்கள் வாக்களிக்கவேண்டும். இந்நாட்டு மக்கள் தொகையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்தியர்களின் வாக்கு வங்கியின் சேமிப்பும் குறைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். அண்மையில் ம.இ.கா தலைவர்களுடன் பிரதமரும் (கெஅடிலான் தலைவர்) துணைப்பிரதமரும் (அம்னோ தலைவர் ) நடத்திய சந்திப்பும் அதில் மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் நிலைத்த்னமைக்கு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சக்தி போன்று, ஐ.பி.எப். – இந்தியர்களை பிரதிநிதிப்பதாகக் கூறும் மற்ற இந்தியர் கட்சிகள் இணைந்து நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பதுடன், தேர்தல் முடிந்தவுடன், ஒன்றாக அமர்ந்து ஒட்டுமொத்த சமுதாய பிரச்சினைகளையும் ஆய்ந்து அவற்றை டத்தோஸ்ரீ அன்வாரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அமுல்படுத்த வழிவகைகளைக் காணவேண்டும். ஒன்றுபட்டு செயல்படுவோம். நல்ல சமயம் இது. வாக்காளர்களே! தலைவர்களே! நழுவ விடாதீர்கள். பக்காத்தான் ஹரப்பானை நம்பி வாக்களிப்போம்” என குமரன் வலியுறுத்தினார்.