ஷா ஆலாம் : 2008 பொதுத் தேர்தல் வரை சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு கட்சியோ – கூட்டணியோ – தேசிய முன்னணியைத் தோற்கடிக்கலாம் என்ற சித்தாந்தத்தை நீங்கள் முன்வைத்தால் அதற்கு ஆதரவாக – 1 ரிங்கிட் கூட பந்தயம் கட்ட யாரும் முன்வரமாட்டார்கள்.
ஆனால், அந்த அதிசயமும் நிகழ்ந்தது. குறிப்பாக ஹிண்ட்ராப் போராட்டத்தால் தேசிய முன்னணிக்கு எதிர்ப்பாக மாறிய இந்திய வாக்குகள் – ஜசெகவுக்கு ஆதரவாகத் திரும்பிய சீனர்களின் வாக்குகள் – அன்வாருக்கு ஆதரவாக விழுந்த மலாய் வாக்குகள் – இப்படியாக எல்லாம் சேர்ந்து 2008-இல் சிலாங்கூரைக் கைப்பற்றியது பக்காத்தான் கூட்டணி. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையில் – தேசிய முன்னணி தந்த நெருக்குதல்களுக்கு மத்தியில் – தொடர்ந்து 2013, 2018 பொதுத் தேர்தல்களிலும் சிலாங்கூரைக் கைப்பற்றி சாதனை புரிந்தது பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி.
2018-இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்ற சாதனை படைத்த பக்காத்தான் கூட்டணி இந்த முறை தேசிய முன்னணி இணைந்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
56 தொகுதிகளில் ஜசெக போட்டியிட்ட 15 தொகுதிகளையும் கைப்பற்றியது. பிகேஆர் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியிட்டதோ 20 தொகுதிகளில்!.
அமானா 9 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய முன்னணி 12 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று மோசமானத் தோல்வியைத் தழுவியது.
பெரிக்காத்தான் கூட்டணியில் போட்டியிட்ட பாஸ் கட்சி 10 தொகுதிகளையும் பெர்சாத்து 12 தொகுதிகளையும் கைப்பற்றின.
2018 பொதுத் தேர்தலில் 3 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலாங்கூரில் வெற்றி பெற்றனர். இந்த முறை நால்வர் வெற்றி பெற்றனர்.
செந்தோசா தொகுதியில் அபார வெற்றி பெற்றார் டாக்டர் குணராஜ்.
பிகேஆர் சார்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வேட்பாளரான தீபன் சுப்பிரமணியம் புக்கிட் மெலாவாத்தி தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஜசெக சார்பில் 3 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். புக்கிட் காசிங் தொகுதியில் ரிஷ்யாகரன், பந்திங் தொகுதியில் பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் தொகுதியில் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோரே அந்த மூவர்.