Home நாடு சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை பாஸ் தோற்கடிக்குமா?

சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை பாஸ் தோற்கடிக்குமா?

405
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் நாடாளுமன்றத் தொகுதியான பாகோவுக்கு அருகாமையில் இருக்கும் தொகுதிதான் பாக்ரி.

பாக்ரி தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி சிம்பாங் ஜெராம். அதற்கான சட்டமன்ற உறுப்பினர்  முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் கடந்த ஜூலை 23-ஆம் தேதி காலமானதால் நடைபெறும் இடைத் தேர்தல்  ஜோகூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஸ் போட்டியிடுவதால், இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, ஜோகூரில் தன் பச்சை அலையைப் பரப்புமா பாஸ் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சலாஹூடின் அயூப். அவரின் மறைவால் நடைபெறும் இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. வாக்களிப்பு செப்டம்பர் 9-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அமானா – பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக பாக்ரி நாடாளுமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். அவர் ஒரு பொறியியலாளர் (என்ஜினியர்) ஆவார்.

பாஸ் கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடுபவர் டாக்டர் முகமட் நஸ்ரி யாஹ்யா. அவர் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணராவார். சுயேட்சை வேட்பாளர் இந்திய வணிகரான எஸ்.ஜெகநாதன்.

சலாஹூடின் அயூப் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலும் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்றது.

ஒற்றுமை அரசாங்கம் அடிப்படையில் தேசிய முன்னணி இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பக்காத்தான் ஹாரப்பானுக்கு ஆதரவு தருகிறது.

ஒரு சுயேட்சை வேட்பாளரும் போட்டியிடுவதால் இந்த இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டிகள் உருவாகியுள்ளன.

சிம்பாங் ஜெராம் தொகுதி 40,379 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. 2018 புள்ளிவிவரங்களின்படி 3 விழுக்காட்டு வாக்காளர்கள் மட்டுமே இந்தியர்கள். 54 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். 43 விழுக்காட்டினர் சீனர்கள். 1 விழுக்காட்டினர் மற்றவர்கள்.