சென்னை : நேற்று வியாழக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் அயலக தமிழர் தினம் 2024 கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மலேசியாவில் இருந்தும் கணிசமான அளவு பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மலேசிய நாட்டின் சார்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அங்கமாக நேற்று நடைபெற்ற “ஒளிரும் எதிர்காலம்- வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் அமர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த அமர்வில் மலேசியாவின் கணினித் துறை வல்லுனர் முத்து நெடுமாறன் உரையாளர்களில் ஒருவராக சிறப்புரை நிகழ்த்தினார். இந்த அமர்வுக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டில் தொழில்நுட்பத்துறை இன்னும் பல படிநிலை மேம்பாடுகளைக் காண்பதற்கான வழிவகைகளைப் பற்றியும், தொழிநுட்பம் சார்ந்த முதலீடுகளை தமிழகத்திற்கு மேலும் ஈர்க்க என்னென்ன முன்னெடுப்புகளைக் கையாளலாம் என்பதைப் பற்றியும் இந்த அமர்வின் கலந்துரையாடல் அமைந்திருந்ததாக முத்து நெடுமாறன் கூறினார்.
தமிழர்களுக்கு எந்தெந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும், எந்தெந்த துறையில் உயர்கல்வி கற்பதற்கு, தொழில்துறையில் கவனத்தை செலுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்யலாம் என்பது குறித்த விவரங்களை வழங்கும் அங்கமாக இந்த அமர்வு அமைந்தது.
கலை பண்பாட்டுத்துறை ஈடுபாடு எவ்வாறு அவர்களுக்கு தொழில் துறைகளில் வாய்ப்புகளை வழங்கும், அவர்களை முன்னேற்றும், தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது போன்ற விளக்கங்களையும் இந்த அமர்வு விவாதித்தது.
இந்த அமர்வின் கலந்துரையாடல்களை, புதுமை தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபாலன் வழி நடத்தினார்.
இந்த அமர்வில் பங்கேற்றவர்கள் கேள்விகளை முன் வைக்கும் அங்கமும் இடம்பெற்றது. கேள்வி பதில் அங்கத்தில் உலக அரங்கில் இன்றைய சூழலில் தமிழ் மொழியின் பங்கெடுப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த முத்து நெடுமாறன், எல்லா கணினி தளங்களிலும் தமிழ் மொழி சிறப்பாக இயங்குகிறது என்று பதிலளித்தார். கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியில் கூடுதல் வசதிகள் எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு – உதாரணமாக சொல்பிழைத் திருத்தங்கள் – போன்ற வசதிகள் மெல்ல மெல்லத்தான் கணினித் தளங்களில் அறிமுகம் காணும் என்றும் அவற்றின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்கத்தான் இதனை கணினியில் தொழில் நுட்பமாக இடம்பெறச் செய்யும் முயற்சிகளும் அதிகரிக்கும் என்றும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
‘ஒளிரும் எதிர்காலம்’ என்ற இந்த அமர்வு. அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்ற ஓர் அமர்வாக அமைந்தது.