Home நாடு கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 9 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் டிபிபி டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து மரண தண்டனையை மறுஉறுதிப்படுத்தியது.

சிமிட்டி கொள்கலம் (டிரம்) ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அரசு தரப்பு  வழக்கறிஞர் அந்தோனி கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டாக்டர் ஆர். குணசேகரன் மற்றும் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது.

குணசேகரன், 61; எஸ்.ரவி சந்தரன், 53; ஆர்.தினீஷ்வரன், 32; ஏ.கே.தினேஷ் குமார், 31; எம். விஸ்வநாத், 34, மற்றும் எஸ் நிமலன், 31 ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்ட அறுவராவர்.

#TamilSchoolmychoice

குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் மொராய்ஸைக் கொல்ல ஒரு பொதுவான நோக்கம் இருந்ததை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் தனது 2020-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியன்று விசாரணை தொடங்கியதில் இருந்து மொத்தம் 84 சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, இங்குள்ள ஜாலான் டூத்தாமாஸ் ராயாவிலிருந்து, நம்பர் 1, ஜாலான் யுஎஸ்ஜே 1/6 டி, சுபாங் ஜெயாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​55 வயதான மொராய்ஸைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹாடாரியா சைட் இஸ்மாயில், அகமட் சைடி இப்ராகிம், அஸ்மி அரிஃபின் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஏகமனதாக குற்றவாளிகள் அறுவரின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் அதற்கு அடிப்படையான சாட்சியங்களையும் தீர ஆராய்ந்ததில் உயர்நீதிமன்ற நீதிபதி சட்ட ரீதியாக சரியான தீர்ப்பை வழங்கியதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.

கொலை செய்யப்பட்ட கெவின் மொராய்சின் சடலம் கான்கிரிட் சிமெண்டால் நிரப்பப்பட்ட கொள்கலம் ஒன்றில் சுபாங் மேவா, சுபாங் ஜெயா வட்டாரத்தில் 16 செப்டம்பர் 2015-ஆம் நாள் கண்டெடுக்கப்பட்டது.