புதுடில்லி: நமது மலேசியப் பிரதமர்களில், வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பல்கலைக் கழகங்களிலும், பொது அமைப்புகளிலும் பல்வேறு தலைப்புகளில் பொதுஅரங்க உரைகளை அடிக்கடி நிகழ்த்துபவர்கள் இருவர். ஒருவர் துன் மகாதீர். மற்றொருவர் நடப்பு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம்.
தற்போது இந்தியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் அன்வார், புதுடில்லியில் உள்ள ‘சாப்ரு உலக விவகாரங்களுக்கான இந்திய மன்றம்’ அமைப்பில் (Sapru House Indian Council of World Affairs) ‘வளரும் புதிய தென்னாசிய உலகம்: மலேசியா-இந்தியா உறவுகளை பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் பொதுஅரங்க உரையாற்றினார்.
“மலேசியாவின் பொருளாதார – தூதரக முயற்சிகளை பன்முகப்படுத்துவதற்கான இலக்காக பிரிக்ஸ் (BRICS) போன்ற நாடுகளின் கூட்டமைப்பில் பங்கேற்பதன் மூலம் மட்டுமல்லாமல், கூட்டு முயற்சிகள் மற்றும் வியூகப் பங்காளித்துவ நிலைகளின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் வலியுறுத்த விரும்புகிறேன். பிரிக்ஸில் பங்கேற்பது இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மட்டுமே பலப்படுத்துவது இல்லை, மாறாக தொழில் துறைகளுக்கும் கொள்கைகளுக்கும் எல்லை கடந்த ஒரு விரிவான ஒத்துழைப்பையும் அந்தக் கூட்டமைப்பு திறக்கிறது” என அன்வார் தன் உரையில் தெரிவித்தார்.
புதிய புவிசார் தென்னாசிய உலக மாறுதல்கள் குறித்தும் அன்வார் தன் உரையில் குறிப்பிட்டார். இது ஒரு தவிர்க்க முடியாத மாற்றம் என மலேசியா நம்புகிறது. மேலும் அது பன்முகத்தன்மையையும் அவர்களின் வேறுபாடுகளையும் ஏற்று ஒருமித்த தன்மையை வளர்க்கும் என்றும் அவர் கூறினார்.
“உலகளாவிய செல்வாக்கில் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் புதிய தென்னாசிய உலகம், தற்போது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டையும் உலக மக்கள்தொகையில் 85 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. 2030 க்குள் உலகின் மூன்றில் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் புதிய தென்னாசிய உலகத்தில் இருந்து வரும் என கருதப்படுகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்” என அன்வார் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமை குறித்தும் குறிப்பிட்ட அன்வார், இந்தியாவுடனும் மற்ற நாடுகள், அமைப்புகளுடனும் மலேசியா நெருங்கிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
ஆசியான் கலந்துரையாடல் பங்கெடுப்பாளரான இந்தியா, இந்த வட்டாரத்தில் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என நம்புவதாகவும் அன்வார் தனது உரையில் தெரிவித்தார்.
மலேசியா, ஆசியானுக்கும் வங்கக்கடல் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான முன்முயற்சிக்கும் (பிம்ஸ்டெக்) இடையே ஈடுபாட்டை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.