Home Photo News டிரம்ப் அபார வெற்றி ஏன்? சுவாரசிய ஆட்டங்கள் இனிமேல்தான் ஆரம்பம்!

டிரம்ப் அபார வெற்றி ஏன்? சுவாரசிய ஆட்டங்கள் இனிமேல்தான் ஆரம்பம்!

180
0
SHARE
Ad

(அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் என்ற தொடரின் 8-வது நிறைவுக் கட்டுரையில் டிரம்ப் அபார வெற்றி பெற்றது எப்படி? கமலா ஹாரிஸ் தோல்விக்கான காரணங்கள் என்ன? போன்ற அம்சங்களை விவாதிக்கிறார் இரா.முத்தரசன். அமெரிக்க அதிபராக டிரம்பின் சுவாரசிய ஆட்டங்கள் இனிமேல்தான் ஆரம்பம் என்பது அவரின் கண்ணோட்டம்)

  • எலோன் மஸ்க் என்ன பொறுப்பை ஏற்பார்?
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமைச்சராவாரா?
  • கென்னடி பரம்பரையிலிருந்து ஒருவர் குடியரசுக் கட்சி சார்பில் அமைச்சராகலாம்!
  • 2 பெண் அதிபர் வேட்பாளர்களைத் தோற்கடித்த டிரம்ப்!
  • துணையதிபர் ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா இந்தியர்

வெவ்வேறு பிரச்சனைகளைக் கொண்ட அமெரிக்காவின் பலதரப்பட்ட மாநில மக்களின் மனங்களில் – ஒருமுகமாக – ஆழமாக சென்று தைக்கும் ஒரே ஓர் அம்சத்தைக் கையிலெடுத்து அதனைத் தீவிரமான பிரச்சாரங்களின் மூலம் வாக்காளர்களிடம் கொண்டு சென்றார் டிரம்ப். அதுவே அவரின் வெற்றிக்கு முழுமுதற் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தென் அமெரிக்க நாடுகளின் சட்டவிரோத அந்நியர்களின் குடியேற்றம்தான் டிரம்ப் கையிலெடுத்த அந்த விவகாரம்.

#TamilSchoolmychoice

தினமும் ஆயிரக்கணக்கில் சட்டவிரோதமாக நாட்டில் நுழையும் இத்தகைய குடியேற்றவாசிகளால், உள்ளூர் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன, சிறுதொழில்கள் பாதிக்கப்படுகின்றன, குற்றச் செயல்கள் பெருகுகின்றன, போதைப் பொருள் புழக்கங்கள் அதிகரிக்கின்றன – என டிரம்ப் பிரச்சாரக் குழுவினர் முன்வைத்த வாதங்கள் மக்களிடையே எடுபட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து முறையாக குடிநுழைவு (விசா) அனுமதி பெற்று அமெரிக்காவுக்குள் வரும் பல அந்நிய நாட்டவர்களும் கூட – குறிப்பாக இந்தியர்கள் கூட – இத்தகைய அந்நிய சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். இவர்களும் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

இங்கே மலேசியாவிலேயே நம்மில் பலரும், உள்நாட்டுக்காரர்களைவிட வங்காளதேசக்காரனும், இந்தோனிசியனும் ஒருவேலையை மலிவான கட்டணத்தில் செய்து தருகிறான் – என நாம் எப்படி அவர்களை நாடிச் செல்கிறோமோ – அதே போன்ற நிலைமைதான் அமெரிக்காவிலும்! அவர்கள் நாடிச் செல்வது சட்டவிரோதமாகக் குடியேறும் தென் அமெரிக்கர்களை!

இந்தப் பிரச்சனைதான் டிரம்புக்கு ஆதரவாகவும் – கமலாவுக்கு எதிராகவும் அமெரிக்க வாக்குகளைத் திசை திருப்பியது.

 தோல்வி கண்டு திரும்பி வந்த டிரம்பின் சாதனை

அமெரிக்க வரலாற்றில் ஒருவர் அதிபராகப் போட்டியிட்டு தோல்வி கண்டு, பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அன்றைய நாளில் ஆபிரகாம் லிங்கன் – 1960-ஆம் ஆண்டுகளில் ரிச்சர்ட் நிக்சன் – அத்தகைய சாதனைகளைப் படைத்தவர்கள். ஆனால் அதிபராக ஒரு தவணை வெற்றி பெற்று, அடுத்த தேர்தலில் தோல்வி கண்டு, அதற்கடுத்த தவணையிலேயே  மீண்டும் போட்டியிட்டு அதிபராகி சாதனை புரிந்திருக்கிறார் டிரம்ப்.

78-வது வயதிலும், அடுக்கடுக்காக வரிசை கட்டி நின்ற வழக்குகள், பாலியல் புகார்கள், எதிர்மறை விமர்சனங்கள் – இவற்றுக்கு மத்தியிலும், வெற்றி பெற்று, விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் டிரம்ப். சாதனைக்கு வயது ஒரு காரணமல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஜோ பைடனின் பலவீனமான தலைமைத்துவம்!

கடந்த 4 ஆண்டுகளாக அதிபர் ஜோ பைடனின் முதுமையும், ஞாபக மறதியும் கலந்த பலவீனமான தலைமைத்துவமும் கமலாவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பைடனின் துணையதிபராக இருந்த கமலாவால் பைடனைத் தற்காக்கவும் முடியவில்லை. தன்னை துணையதிபராக 2020 தேர்தலில் தேர்ந்தெடுத்தவர் என்ற காரணத்தால் அவரைக் குறைகூறவும் முடியவில்லை.

துணையதிபராக 4 ஆண்டுகளில் தான் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளாக கமலாவால் எதனையும் குறிப்பிட முடியவில்லை என்பதும் அவரின் பிரச்சாரத்தின் பலவீனங்களில் ஒன்று.

ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் உக்ரேன், காசா போர்களை நிறுத்த முடியாத இயலாமை – சீனாவின் மேலோங்கும் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியாத பலவீனம் – மற்ற உலக நாடுகளின் தலைவர்களைத் தன்பக்கம் ஈர்க்க முடியாத கொள்கைகள் – இப்படி பல எதிர்மறை விமர்சனங்களை எதிர்நோக்கியது பைடன் அரசாங்கம்.

நம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே இதற்கு சிறந்த உதாரணம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக வலம் வந்தபோது அமெரிக்காவின் கைக்கூலி என விமர்சிக்கப்பட்டவர். பிரதமரான பின் அமெரிக்காவுடன் நெருக்கம் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் அவரே இப்போது சீனாவுடனுடன் ரஷியாவுடனும் நெருக்கம் காட்டுகிறார். அந்த நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் தோழமை நாடாக மலேசியாவை இணைத்துள்ளார்.

டிரம்ப் ஆட்சியில் இந்திய முகங்கள்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவராக டிரம்புக்கு எதிராகப்  போட்டியிட்டு கவனத்தை ஈர்த்தவர் விவேக் ராமசாமி என்ற அமெரிக்க இந்தியர். டிரம்புக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர். டிரம்பின் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பை இவர் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் துணையதிபர் வேட்பாளர் வான்ஸ் – மனைவி உஷாவுடன் – அன்றும் இன்றும்…

டிரம்பின் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் ஜே.டி.வான்ஸ். இவரின் துணைவியார் உஷா செலுக்குரி, இந்திய-தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர். துணையதிபராக இருந்த – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த – கமலா வெளியேறினாலும், துணையதிபரின் மனைவியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் வெள்ளை மாளிகையில் நுழைவது அமெரிக்காவில் இந்திய சமூகத்தின் தொடர் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.

டிரம்ப்பும் தனது வெற்றி உரையின்போது உஷாவைப் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

2016-இல் அமெரிக்க மக்கள் தொகையில் 320 ஆயிரமாக இந்திய தெலுங்கு சமூகம், 2024-இல் 1.23 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் அதிகமாகப் பேசப்படும் 3-வது மொழி என்ற பெருமையையும், அந்நிய மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் 11-வது மொழி என்ற நிலையையும் தெலுங்கு கொண்டிருக்கின்றது. தெலுங்கு சமூகத்தினரின் வாக்குகள் டிரம்புக்கு விழுந்ததற்கு துணையதிபர் வேட்பாளர் வான்சின் மனைவி உஷாவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் அமெரிக்கத் தமிழர்கள்தான் கமலாவுக்கு வாக்களித்தார்களே தவிர, இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்க இந்தியர்கள் டிரம்புக்கே வாக்களித்தார்கள் என்பதும் ஒரு கணிப்பு.

கென்னடி பரம்பரை  உறுப்பினர்
இனி டிரம்ப் அரசாங்கத்தில்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஜோன் எஃப் கென்னடியின் குடும்பத்தினர் அனைவரும் பரம்பரை பரம்பரையாக ஜனநாயகக் கட்சியில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்களில் வித்தியாசமாக, ரோபர்ட் கென்னடி ஜூனியர் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இந்த முறை மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் பின்னர் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டு, டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் இளைய சகோதரர் ரோபர்ட் கென்னடியின் மகன்தான் ரோபர்ட் கென்னடி ஜூனியர். அண்ணன் கென்னடி அதிபராக இருந்தபோது, தம்பி ரோபர்ட் கென்னடி அவரின் அரசாங்கத்தில் சட்டத் துறைத் தலைவராக இருந்தவர். 1968-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரோபர்ட் கென்னடி போட்டியிட்டார். வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பாராதவிதமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த ரோபர்ட் கென்னடியின் மகன், ரோபர்ட் கென்னடி ஜூனியர், குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக – டிரம்புக்கு பிரச்சாரம் செய்தது, அமெரிக்க அரசியலில் நிகழ்ந்திருக்கும் இன்னொரு மாற்றம். டிரம்பின் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ரோபர்ட் கென்னடி ஜூனியர் வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 பெண் அதிபர் வேட்பாளர்களைத் தோற்கடித்த டிரம்ப்

2016-இல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்த ஹிலாரி கிளிண்டன் – 2024-இல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்த கமலா ஹாரிஸ் – என இரண்டு பெண் அதிபர் வேட்பாளர்களைத் தோற்கடித்த பெருமை டிரம்புக்கு உண்டு.

பெண் வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால், இந்த இரண்டு காலகட்டங்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான மற்ற அரசியல் சூழ்நிலைகள் அமைந்திருந்ததை நாம் பார்க்க முடியும். அதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது டிரம்பின் சாதுரியம் – வியூகம்.

கமலாவின் தோல்விக்குக் காரணம் என்ன?

கமலாவின் தோல்விக்கு வேறு சில காரணங்களும் உள்ளன. முதலில் ஜோ பைடனை அதிபராக அறிவித்து விட்டு பின்னர் அவரை மாற்றி, பிரச்சாரத்தின் பாதியில், கமலாவை அதிபர் வேட்பாளராக அறிவித்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் – அதனால் கமலாவுக்கு பிரச்சாரத்திற்காகக் கிடைத்த குறைந்த கால அவகாசம் – ஒரு காரணம்.

அளவுக்கதிகமாகத் தன்னை இந்தியர் சார்பாக அவர் காட்டிக் கொண்டதால் வெள்ளையர்கள் எதிர்த்து வாக்களித்திருக்கலாம் என்பதும் இன்னொரு காரணம்.

அமெரிக்காவின் எதிர்காலத்தை மாற்றுவேன் என முழங்கிய டிரம்பிற்கு ஆதரவாக எலோன் மஸ்க் போன்ற பணக்காரப் பிரபலங்கள் துணை நின்றதும் – களத்தில் இறங்கி நேரடியாக மக்களிடம் பிரச்சாரங்கள் செய்ததும் – டிரம்ப் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்தன.

சரி! கமலா ஹாரிஸ் இனி என்ன செய்வார்? தனது போராட்டம் இன்னும் ஓயவில்லை என தோல்விக்குப் பின்னர் முழங்கியிருக்கிறார்.

பொதுவாக ஒருமுறை அதிபர் தேர்தலில் தோல்வி கண்டவர்களை மீண்டும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவின் இரண்டு முக்கியக் கட்சியினரும் தயங்குவார்கள்.

எனினும், 4 ஆண்டுகள் கழிந்து கமலா மீண்டும் ஒருமுறை ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தன்னை முன்நிறுத்த முயற்சி செய்யலாம். டிரம்புக்கும் இதுவே கடைசித் தவணை. எனவே, 2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் பல புதுமுகங்கள் களம் காண்பார்கள். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட மீண்டும் ஒரு வாய்ப்பு கமலாவுக்குக் கிடைக்கலாம்.

-இரா.முத்தரசன்