Home Photo News முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்

முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்

80
0
SHARE
Ad

செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு:

‘எழுத்தோவியம் எழுத்துரு ஆகும் கதை’ – இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகநூலிலும் என்னுடைய பதிவுகள் தளத்திலும் நான் எழுதிய கட்டுரை இது. எழுத்துரு தொடர்பானது என்பதை தலைப்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அன்று முதல் புதிய முரசு அஞ்சலில் வரப்போகும் எழுத்துருகள் சிலவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ‘புதிய அஞ்சல் எப்போது வருகிறது’ என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை. விரைவில் என்று விரைவாக பதில் சொல்லி விடைபெற்றுக்கொள்வேன். அதற்குமேல் சொன்னால் இன்னும் பல கடினமான கேள்விகளுக்கு பதில் தேடவேண்டிவரும் அல்லவா? ஆங்கிலத்தில் ‘opening a can of worms’ என்பார்களே – அதுபோல!

முரசு அஞ்சல் எழுத்துருக்களை மட்டும் கொண்டதல்ல. அஞ்சல், தமிழ்-99 உட்பட பல்வேறு விசைமுக அமைப்புகளைக் கொண்ட தமிழ் உள்ளிடுமுறை. இவற்றை கடைசியாக செம்மை படுத்தியது விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்திற்காகத்தான். அதன் பின் தொடவே இல்லை. இருந்தாலும் இன்று இயங்கும் விண்டோஸ் 11இலும் எந்தச் சிக்கலும் இன்றி இயங்கி வருகிறது. ‘சரியாக வேலை செய்யும் ஒன்றை சரிசெய்ய வேண்டாம்’ என்பது தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதியாகக் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான கோட்பாடு! If it aint broken dont fix it என்பார்கள்.

முத்து நெடுமாறன்
#TamilSchoolmychoice

பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு செயலியை மாற்ற வேண்டுமென்றால், அது புதுமையான, புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஏற்கனவே சிறப்பான செயலி ஒன்று இருக்கும்போது, இதனை உடனே செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரம் இல்லை என்பதால் ஆழமான ஆய்வுகளை அமைதியாகச் செய்து பயனர்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் மாறுதல்களைக் கொண்டுவர பல ஆண்டுகளாக முயன்று வருகிறேன்.

தமிழில் எழுதுவது ஓர் எளிமையான இனிமையான அனுபவமாக இருக்கவேண்டும் என்பதே இந்த ஆய்வின் தலையாய நோக்கம். இதனுள் பல துணைக்கூறுகள் உள்ளன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகப் பிறகு பார்ப்போம். இது ஒரு களிப்பூட்டும் பயணமாக இருக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி!

செல்லினத்தின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தப் பொங்கலில், முரசு அஞ்சல் 40ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்தப் புதிய உருவாக்கங்களை அறிமுகப்படுத்த இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. எனவே புதிய முரசு அஞ்சலின் முன்னோட்டப் பதிப்பை (beta version) அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். முதற்கட்டமாக முரசு அஞ்சலின் நீண்டகால பயனர் சிலரை அழைத்து பயன்படுத்தி கருத்துரைக்க கேட்டுக்கொள்ளவிருக்கிறோம். அதன்பின் சற்று விரிவான பயனர் வட்டத்திடம் செயலி எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் இயங்குவதை உறுதி செய்துவிட்டு உலகத்திற்கு வெளியிட எண்ணியுள்ளோம். முரசு அஞ்சலின் 40ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் உச்சமும் அதுவாக இருக்கும்!

அதுவரை பொங்கல் இனிப்பு வழங்குவதைப்போல் இதோ உங்களுக்கு ஒரு குறுங்காட்சி – அதனைக் கீழ்க்காணும் முகநூல் இணைப்பில் காணலாம்:

https://www.facebook.com/muthu.nedumaran/videos/977437127770320