கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். பிரதமர் பத்துமலை வருவது இதுவே முதன் முறையாகும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, பிரதமரின் வருகை குறித்து அறிவித்துள்ளார். வாட்ஸ்அப் அழைப்பு செய்தியின்படி, பிரதமருக்கு “நுழைவாயிலில் மாலை அணிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்வாரின் வருகை மலேசிய இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் என நடராஜா கூறியுள்ளார்.
இன்று அம்பாங் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொள்ளும் அன்வார் பின்னர் அங்கு உணவகத்தில் பொதுமக்களுடன் உணவருந்துகிறார். அதன் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் பத்துமலைக்கு வருகை தருவார்.
எதிர்வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பத்துமலைக்கு பிரதமர் வருகை தருகை தருவது இந்து சமூகத்தில் உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் பத்துமலைக்கு வருகை தரவிருப்பதை அன்வாரும் உறுதிப்படுத்தினார்.
“இன்ஷா அல்லாஹ், அம்பாங் குடியிருப்பாளர்களுடன் தாமான் மெலாவதியில் உள்ள அல்-மர்தியா மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவேன். அதன் பிறகு, மேடான் செலெரே அஞ்சுங், தாமான் மெலாவதியில் பொதுமக்களுடன் கலந்துறவாடி மதிய உணவு உண்பேன். பின்னர், பத்துமலைக்கு சென்று, அங்குள்ள இந்திய சமூகத்தை சந்தித்து, வரவிருக்கும் தைப்பூச விழாவிற்கு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பத்துமலைக்கு அன்வார் வருகை தர வேண்டும் என பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் தொடர்ச்சியாக பத்துமலைக்கு தைப்பூசக் கொண்டாட்டங்களின்போது வருகை தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கொண்டாட்டத்தில் அன்வார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிநேரத்தில் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை காரணமாக அவர் பத்துமலை வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது எனக் காரணம் கூறப்பட்டது.
முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து கடுமையான சர்ச்சைகள் – விவாதங்களுக்கு மத்தியில் அன்வாரின் இன்றைய வருகை அமைகிறது.
இதற்கிடையில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான விவகாரத்தை இன்று காலையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் விவாதிக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.