புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 17) வாக்குமூலத்தைத் தொடர்ந்து வழங்குவார்
வியாழக்கிழமை (மார்ச் 13) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை தனது வாக்குமூலம் வழங்கும் படலத்தைத் தொடர்ந்தார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை, இஸ்மாயில் சாப்ரியின் பதவிக்காலத்தின்போது விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகைகள் மற்றும் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து மையமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரி கடந்த 2 நாட்களாக ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்து பல மணி நேரத்திற்கு வாக்குமூலம் வழங்கினார். விசாரணை முடியும் வரை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கவிருப்பதாக அவர் விடுத்த சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 3-ஆம் தேதி, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அசாம் பாக்கி, சுமார் RM170 மில்லியன் பணம் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடந்த சோதனையின் பின்னணியில், இஸ்மாயில் சாப்ரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் சந்தேக நபராக இருப்பதாகத் தெரியப்படுத்தினார்.
பல்வேறு அனைத்துலக நாணயங்களில் ரொக்கம் கைப்பற்றப்பட்டதோடு, 16 கிலோ தூய தங்கக் கட்டிகளும் (மொத்தம் சுமார் RM7 மில்லியன் மதிப்புள்ளவை) மீட்கப்பட்டன.
மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக RM2 மில்லியனுக்கும் அதிக பணம் கொண்ட 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 36 பேர் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் மருத்துவ விடுப்பு காரணமாக, வாக்குமூலம் வழங்குவதை ஒத்தி வைத்தார்.
இஸ்மாயில் சாப்ரி பிரதமராக தலைமை வகித்த அரசாங்கத்தின் “மலேசியா குடும்பம்” விளம்பரப் பிரச்சாரத்திற்கான செலவினம் குறித்த ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சந்தேக நபராக உள்ளார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் இஸ்மாயில் சாப்ரியின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மேலும் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முதலில் விளக்கும்படி இஸ்மாயில் சாப்ரியிடம் கேட்க விரும்புவதாக அசாம் தெரிவிதிருந்தார்.