கோலாலம்பூர் : கடந்த மே 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் போட்டியில் கணிசமான எண்ணிக்கையில் இந்திய வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பது அந்தக் கட்சியின் அரசியல் களத்தில் இந்தியர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

பிகேஆர் கட்சி வலைத் தளத்தின் தரவுகளின்படி 20 மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் பதவிகளுக்கு மொத்தம் 88 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 17 பேர் இந்தியர்களாவர்.
போட்டியிட்ட 17 வேட்பாளர்களில் சீக்கியர் ஒருவரும் அடங்குவார். அந்த 17 பேர்களில் 3 பேர் வெற்றி பெற்றனர். 20 வேட்பாளர்களில் 4,699 வாக்குகள் பெற்று 4-வது நிலையில் மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் சிலாங்கூர், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் ஆவார்.

அவருக்கு அடுத்த நிலையில் பினாங்கு, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் 4,373 வாக்குகளுடன் 18-வது நிலையில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற மூன்றாவது வேட்பாளர் வழக்கறிஞரான சிவமலர் கணபதி. இவர் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் சாலேஹாவின் செயலாளருமாவார். இவருக்குக் கிடைத்த வாக்குகள் 4,366 ஆகும். பிகேஆர் புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சிவமலர் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

3 இந்தியர்களைத் தவிர 5 சீன வேட்பாளர்களும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது பிகேஆர் கட்சி ஒரு பல இனக் கட்சியாக உருவெடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆண்டுக்கான பிகேஆர் தேர்தலில் 22,081 பேராளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அவர்களில் 13,752 பேராளர்கள் வாக்களித்தனர்.
மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் போட்டியில் 4,811 வாக்குகளுடன் அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தை முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும் துணையமைச்சருமான அடாம் அட்லி 4,798 வாக்குகள் பெற்றுக் கைப்பற்றினார்.
பிரதமரின் அரசியல் செயலாளரான சான் மிங் காய், முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோரும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.