கோலாலம்பூர், செப் 24 – மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் நடத்தப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் முன்னாள் தாய்லாந்து பிரதமர் சவாலிட் யோங்ஜாய்யுதின் கலந்து கொண்டு தனது அஞ்சலியை செலுத்தினார்.
கடந்த 1996 முதல் 1997 ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த சவாலிட், தான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது தனது நண்பருக்கு அளிக்கும் மரியாதை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தவிர இறுதிச்சடங்கில் தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா, அகானிட் முவான்சவாட் மற்றும் பிஸாம் வாட்டானா வோங்கிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் சின் பெங் பற்றி கூறும் போது, மியான்மர் நாட்டின் ஆங் சான், இந்தோனேசியாவின் சுகார்னோ மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் போன்று மலேசியாவின் ஒட்டு மொத்த வடிவம் சின் பெங் என்றும், இவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டவாதிகள் என்றும் கூறினர்.
மேலும், சின் பெங் நேர்மையும், மிகுந்த துணிச்சலும் உடையவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே சின் பெங்கின் இறுதிச் சடங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்து யாரும் கலந்துகொள்ளவில்லை என்ற போதிலும், மலேசிய தூதரகம் என்ற பெயர் பொறித்த சட்டை அணிந்த ஒருவர் இறுதிச்சடங்கில் படம் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தன்னை தூதரக அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், தகவல்களுக்காக தான் படப்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மலேசிய உளவுப்படையினர் அங்கிருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தினம் அன்று மறைந்த சின் பெங்கின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பேராக் மாநிலம் சித்தியவானில் இறுதிச்சடங்கு நிகழ்த்த பல முறை கோரிக்கை விடப்பட்டும், மலேசிய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்க மறுத்ததால் நேற்று தாய்லாந்திலேயே அவருக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்தப்பட்டது.