Home நாடு விமானப் போக்குவரத்து மாநாட்டில் ஊடகங்களைப் புறக்கணித்தார் அஸாருடின்!

விமானப் போக்குவரத்து மாநாட்டில் ஊடகங்களைப் புறக்கணித்தார் அஸாருடின்!

1045
0
SHARE
Ad

Azharuddin-Abdul-Rahmanகோலாலம்பூர், ஏப்ரல் 1 – விமானப் போக்குவரத்து தொடர்பான ஒரு மாநாட்டில் பேசிக் கொண்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகாவின் (டிசிஏ) தலைவர் அஸாரிடின் அப்துல் ரஹ்மான், இடையிலேயே தன் பேச்சை நிறுத்தி அங்கிருந்த செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

இன்று காலை கோலாலம்பூர் ஷெரடான் இம்பேரியல் தங்கும் விடுதியில் அனைத்துலக விமானப் போக்குவரத்து கழகத்தின் (International Air Transport Association – Iata) மாநாடு நடைபெற்றது.

அதில் பேசிக் கொண்டிருந்த அஸாருதின் திடீரென இடையில் தன் பேச்சை நிறுத்திவிட்டு, “மன்னிக்கவும் இங்கே ஊடகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறீர்களா? இங்கே ஊடகம் இருப்பது எனக்குத் தெரியாது” என்று கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பின்னர், “மன்னிக்கவும், ஊடகத்தை சேர்ந்தவர்கள் தயவு செய்து வெளியே இருங்கள்” என்றும் கூறியுள்ளார்.

ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்லும் வரை அஸாருடின் தனது பேச்சை தொடங்கவில்லை என்று ஸ்டார் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மாயமான மலேசிய விமானம் MH370 பற்றியும், தேடுதல் பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்த போது அஸாருடின், ஊடகங்கள் இருப்பதை உணர்ந்து திடீரென பேச்சை நிறுத்தியுள்ளார்.

இது குறித்து கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் அஸாருடினை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது ஒரு மறைமுக கூட்டம் (closed-door event) என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது” என்று குறுஞ்செய்தி வாயிலாக பதிலளித்துள்ளார்.

“தேவையில்லாத ஒன்று”

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டோம் பாலன்டைன் என்பவரிடம் அஸாருடின் செய்தியாளர்களை வெளியே இருக்கும் படி கூறியதற்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “அது தேவையில்லாத ஒன்று” என பதிலளித்துள்ளார்.

“கடந்த வாரங்களில் அவர் சொல்லாத எதையும், இப்போது புதிதாக சொல்லவில்லை. செய்தியாளர்களை வெளியே இருக்கும் படி கூறியது தேவையில்லாத ஒன்று. அவரது அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகங்கள் இருப்பதை முன்பே தெரிவித்தனர். பின்னர் ஏன் தனது பேச்சை திடீரென நிறுத்தினார் என்று தெரியவில்லை” என்று டோம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் சென்ற மாஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. விசாரணையில் விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும், இன்று வரை அவ்விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.