புதுடில்லி, ஜூன் 18 – ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் 2 நாட்கள் பயணமாக இன்று (புதன்கிழமை) இந்தியாவுக்கு செல்கிறார். நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு ரஷ்ய தலைவர் ஒருவர் வருவது இதுவே முதல்முறை ஆகும்.
டிமித்ரி ஓ ரோகோசின், இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேசுகிறார். ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரையும் அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள், பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவருடன் டிமித்ரி ஓ ரோகோசின் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு மி-35 ரகத் தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று தெரிகிறது.
மேலும், கூடங்குளத்தில் 3-ஆவது மற்றும் 4-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துவர். இந்தக் கூடுதல் அணு உலைகள் அமைப்பதற்கான பொதுவான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.
இந்நிலையில் அணு உலைகள் அமைப்பது பற்றி இருவரும் பேச்சு நடத்துகிறார்கள். இதுதொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.