மெல்போர்ன், ஆகஸ்ட் 8 – மாஸ் விமானம் எம்எச் 17, உக்ரைன் போராளிக் குழுக்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் நேற்று துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த மாதம் 17-ம் தேதி மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைக் கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 298- பயணிகள் உயிரிழந்த இந்த சம்பவத்தில், 38 பேர் ஆஸ்திரேலிய பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெல்போர்னில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் நேற்று காலை தேசிய நினைவு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்டன் உள்ளிட்டமுக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறியதாவது:- “உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பதைப் பற்றியோ அவர்களுக்கான தண்டனைகள் பற்றியோ விவாதிப்பதற்கான தருணம் இதுவல்ல.
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதும், அவர்களது குடும்பத்தினருக்கு துணையாய் இருப்பதுமே நாம் தற்போது ஆற்ற வேண்டிய கடமை” என்று கூறியுள்ளார்.
இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா முழுவதும் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.