ஸ்டாக்ஹோம், அக்டோபர் 8 – 2014-ம் ஆண்டின் இயற்பியல் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த பரிசினை மூன்று இயற்பியல் அறிஞர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் செயல்படும் ராயல் சுவிடிஷ் அறிவியல் கழகம் வெளியிட்டது.
1990-களுக்கு முன் சிகப்பு மற்றும் பச்சை நிற ‘ஒளி உமிழ் டையோடுகள்’ (LED) கண்டறியப்பட்டு இருந்தாலும், நீல நிற ஒளி உமிழ் டையோடுகளை உருவாக்குவது மிகுந்த சவாலான ஒன்றாக இருந்தது.
அந்த சமயத்தில் ஜப்பானின் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுரா ஆகிய மூவரும் சேர்ந்து நீல நிற ஒளி உமிழ் டையோடுகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வெற்றி கண்டனர்.
அவர்களின் ஆராய்ச்சியே, தற்போது நாம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளுக்கான வெள்ளைநிற ஒளியை உமிழும் டையோடுகளை கண்டறிய வழிவகுத்தது. ,
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத புதிய எரி சக்தியான நீல ஒளியை உமிழும் டயோடுகளைக் கண்டுபிடித்ததற்காக அவர்களை ராயல் சுவிடிஷ் அறிவியல் கழகம் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தது. இந்த பரிசினை டிசம்பர் 10-ந் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் சுவீடன் அரசர் வழங்குகிறார்.