கோலாலம்பூர், நவம்பர் 18 – அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் 110 வருடங்கள் பழமை வாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா அசிரமம், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரா அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறுகையில், ஆஸ்ரமம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கூறும் அறிக்கை கடந்த புதன்கிழமை ஆசிரம நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதே அறிக்கை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசாங்க பதிவேட்டில் ஆசிரமத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் அறிக்கை, சம்பந்தப்பட்ட நில இலாகாவிடம் அடுத்த மாதம் வழங்கப்படும்” என்று நேற்று நாடாளுமன்றத்தில் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மற்றும் மே மாதங்களில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுக்கள் வருகிறதா என விசாரணை நடைபெறும் என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதே விசாரணை நடத்தப்பட்டு இறுதியாக அக்டோபர் மாதம் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.