கோலாலம்பூர், நவம்பர் 29 – தேசிய பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் என்று மலாக்காவைச் சேர்ந்த பேராளர் அம்னோ மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார்.
அம்னோ பொதுப்பேரவையில் பேசிய மலாக்காவைச் சேர்ந்த முஸ்தபா மூசா, இத்தகைய நடவடிக்கையின் மூலம் தாய்மொழிப் பள்ளிகளை படிப்படியாக மூடலாம் என்றும் தெரிவித்தார்.
“தேசிய பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தில் சீன மற்றும் தமிழ் மொழிப் பாடங்களை சேர்த்து அவற்றை கட்டாயமாக்க வேண்டும். இதனால் நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. கணினி வசதி உட்பட தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களையும் சேர்த்து தேசிய பள்ளிகளை மேலும் வலுப்படுத்தினால், ஒரே மாதிரியான பள்ளிகள் மட்டுமே இருக்கும். மேலும் தேசிய பள்ளிகள் போதுமான தரத்துடன் இல்லை என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இருக்காது. எனவே மற்ற பள்ளிகளை மூடுவதற்கு முன் நமது தேசிய பள்ளிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்,” என்றார் முஸ்தபா மூசா.
தாய்மொழிப் பள்ளிகளை விட தேசியப் பள்ளிகள் மிகவும் பின்தங்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய பள்ளிகளுக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வலதுசாரி மலாய் இயக்கங்கள் தாய்மொழிப் பள்ளிகளால் தேச ஒற்றுமை குலைவதாகவும், அப்பள்ளிகளை மூட வேண்டும் என்றும் நீண்ட காலமாக கூறி வருகின்றன. எனினும் அம்னோ மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப், தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.