Home நாடு சங்கப் பதிவதிகாரி முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் – நாடு திரும்பிய பழனிவேல் அறிவிப்பு

சங்கப் பதிவதிகாரி முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் – நாடு திரும்பிய பழனிவேல் அறிவிப்பு

737
0
SHARE
Ad

GP Airport 12 Dec - 1சிப்பாங், டிசம்பர் 12 – இன்று பிற்பகல் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மஇகாவுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடும் சங்கப் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து மஇகா மேல் முறையீடு செய்யும் என அறிவித்தார்.

இன்று பிற்பகல் சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த பழனிவேலுவை ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும், மஇகா உறுப்பினர்களும் அவரை வரவேற்றனர்.

கட்சியில் சரிந்து வரும் அவரது ஆதரவு பலம் – அவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து பரவலாக எழுந்து வரும் அறைகூவல்கள் – இவற்றுக்கு மத்தியில் நாடு திரும்பிய அவருக்கு கட்சியில் இன்னும் ஆதரவு குறையவில்லை என்பதைக் காட்டும் பொருட்டு நேற்று முதல் அவரது ஆதரவாளர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தங்கள் சார்பு ஆதரவாளர்களைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

Crowd waiting for Palanivel at Airport 12 Dec - Photo 1
பழனிவேலுவை வரவேற்க இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள்
#TamilSchoolmychoice

பழனிவேலுவை வரவேற்கத் திரண்ட மஇகா தலைவர்களில் நடப்பு உதவித் தலைவர்களாக கடந்த கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ எஸ்.சோதிநாதன், ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

பழனிவேலுவை வரவேற்க வந்திருந்து தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியிருப்பதன் மூலம், மஇகாவில்  மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டால், கடந்த ஆண்டு தேர்தலைப் போலவே, தேசியத் தலைவரின் அணியோடு இம்முறையும் இணைந்திருப்போம் என்பதை சோதிநாதனும், பாலகிருஷ்ணனும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

GP Airport 12 dec - 2
விமான நிலையம் வந்தடைந்த பழனிவேலுவை வரவேற்கத் திரண்ட ஆதரவாளர்கள்

அடுத்த வாரத்தில், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம், மற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோரோடு கலந்து சந்திப்புக்களை நடத்திய பின்னர் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பேன் என்றும் பழனிவேல் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். சங்கப் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யக் கூடும் என்றும் அவர் கோடி காட்டியுள்ளார்.

சவரம் செய்யப்படாத வெண்தாடியுடன் கோலாலம்பூர் வந்து சேர்ந்த பழனிவேல், தனது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கி, அளவளாவி தனது நன்றியைப் புலப்படுத்திக்கொண்டார்.

பழனிவேல் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பதவியேற்றது முதல் இப்போதுதான் முதன் முறையாக இதுபோன்று அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.