Home அவசியம் படிக்க வேண்டியவை 2015இல் எதிர்பாருங்கள்! முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளில் அதிரடி தொழில் நுட்ப மேம்பாடுகள்!

2015இல் எதிர்பாருங்கள்! முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளில் அதிரடி தொழில் நுட்ப மேம்பாடுகள்!

880
0
SHARE
Ad

2015 New yearகோலாலம்பூர், ஜனவரி 1 – பிறந்திருக்கும் புத்தாண்டில் முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் பயனர்களுக்கும் செல்லியல் வாசகர்களுக்கும் இனிப்பான செய்திகள் காத்திருக்கின்றன.

கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் மொழியின் செயல்பாட்டை எளிமைப் படுத்தும் நோக்கிலும் பயன்பாட்டைப் பரவலாக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட முரசு அஞ்சல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன!

காலத்திற்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இச்செயலி, அச்சு, பதிப்பு, கலை, சமயம், இலக்கியம், கல்வி, அரசு, தகவல், வணிகம், போன்ற பல துறைகளில் தமிழ்க் கூறு நல்லுலகெங்கும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

Murasu AnjalLogo

முரசு அஞ்சலின் உயரிய தொழில்நுட்பத் தரம் மைக்ரொசாஃப்ட், ஆப்பிள் முதலிய நிறுவனங்களின் இயங்குதளங்களில் இச்செயலியின் கூறுகள் சேர்க்கப்பட வாய்ப்பளித்துள்ளது.

மலேசியக் கல்வி அமைச்சு 2002/2003ஆம் ஆண்டு தமிழ்ப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ செயலியாக முரசு அஞ்சலை அறிமுகப் படுத்தியது. அதுபோல 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தமிழ்க் கல்விக்கான அரிகாரப்பூர்வ செயலியாக இதனை ஏற்றுக் கொண்டது. (காண்க: http://murasu.com)

வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாறுதல்களைக் கருத்தில் கொண்டு முரசு அஞ்சலின் 11ஆம் பதிப்பு இவ்வாண்டு முற்றிலும் மாறுபட்ட மேம்பாட்டை காணவுள்ளது. இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தமிழ் மொழி பயனர்களின் கருத்துகளை உள்வாங்கியும் புதிய இயங்குதளங்களில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்டுவரும் இந்தப் புதிய பதிப்பு, உலகளாவிய பயனர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கலாம்.

செல்லினம்

2005ஆம் ஆண்டு பொங்கலன்று பொதுப் பயனீட்டிற்கு வந்த செல்லினம் தனது 10ஆம் ஆண்டைக் கடக்கிறது. செல்பேசிகள், திறன்பேசிகள் முதலிய கையடக்கக் கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு பின்தங்கிவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தோடும், உலகில் எந்த மொழிக்கும் குறைவாக தமிழ் மொழியின் பயன்பாடு இந்த புதியத் தளங்களில் இருக்கக் கூடாது என்ற குறிக்கோளோடும் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட செயலி இது.

Sellinam-promo-Image

ஐ-போன், ஐ-பேட், எச்டிசி நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளில் செல்லினம் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது இதற்குக் கிடைத்திருக்கும் உலக அங்கீகாரமாகும்.

இதுவரையில் உலகின் பல பகுதிகளில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் செல்லினம் செயலியை பதிவிறக்கம் செய்து தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். முகநூல், டிவிட்டர், குறுஞ்செய்தி, வாட்ஸ்எப் போன்ற செயலிகளில் நேரடியாகவே தமிழில் மிகவும் எளிமையாக எழுதி, பதிவேற்றம் செய்ய செல்லினம் உதவுகிறது.

செல்லினம் செயலியிலும் சில புதிய அம்சங்களும், தொழில் நுட்ப மேம்பாடுகளும் இணைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

செல்லியல்

மலேசியாவிலேயே தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும், செல்பேசி செயலி (மொபைல் அப்ளிகேஷன்) இணையம் என இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் செய்தித் தளம் செல்லியல்.

Selliyal Logo 440 x 215

2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய செல்லியல் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி பயனர்களின் தேவைகள், ஆர்வங்கள் அறிந்து அதற்கேற்ப செய்திகளைத் தமிழில் உடனடியாகவும் பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக வழங்கி வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் செல்பேசிகளின் திரைகளில் குறுஞ் செய்திகளாக பரிமாற்றம் செய்யும் புதுமையான முறையையும் செல்லியல் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது.

செல்லியலின் இணைய செய்தித் தள முகப்புப் பக்கம் தற்போது புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு வருவதோடு, செல்பேசி செயலியின் உள்ளீடுகளிலும் குறிப்பிடத்தக்க தொழில் நுட்ப மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

muthu-nedumaran
முத்து நெடுமாறன்

இந்த மூன்று தளங்களின் தொழில் நுட்ப ஆலோசகராகவும், வடிவமைப்பாளராகவும் முத்து நெடுமாறன் செயலாற்றி வருகின்றார்.

இந்த மேம்பாடுகள் குறித்த அறிவிப்புகள் இந்த ஆண்டின் முற்பகுதியிலேயே ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் வழி நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்,

அந்த இலக்கை நோக்கி, இந்த மூன்று தளங்களின் தொழில் நுட்பக் குழுவினர் தீவிரமாக முயன்று வருகின்றனர் என்றும் கூறிய முத்து நெடுமாறன் பயனர்கள் வாசகர்கள் அனைவருக்கும் குழுமத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.