Home நாடு அம்னோவில் மோதலை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள் – ஹிஷாமுடின் காட்டம்

அம்னோவில் மோதலை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள் – ஹிஷாமுடின் காட்டம்

589
0
SHARE
Ad

hishamudinபுத்ராஜெயா, மார்ச் 13 – அடுத்த பிரதமராக தேர்வு பெற தமக்கு அதிக ஆதரவு இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பின் முடிவுகளை தான் நம்பவில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

இது தனக்கும் மற்ற அம்னோ தலைவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“கருத்துக் கணிப்புகளை அதிகப்படியாக சார்ந்து இருக்க வேண்டாம். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்னோ பொதுப் பேரவையின்போது ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது நான் அம்னோ உதவித் தலைவர் பதவிக்குக் கூட போட்டியிடுவதாக இல்லை. அடுத்த சில மாதங்களிலேயே நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராகிவிட்டதாக மற்றொரு கணிப்பு வெளியாகி உள்ளது. எனவே இத்தகைய கருத்துக்கணிப்புகளை நான் எந்த அளவுக்கு நம்புகிறேன் என்பதற்கு இதுவே உரிய பதிலை அளிக்கும். எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான முயற்சி இது. இத்தகைய முயற்சிகளை நான் ஊக்குவிப்பதில்லை,” என்றார் ஹிஷாமுடின்.

#TamilSchoolmychoice

அண்மையில் மெர்டேக்கா மையம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் வருங்காலத்தில் அமைச்சர் கைரி ஜமாலுடின், டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆகியோரைக் காட்டிலும் பிரதமர் பதவியை ஏற்க ஹிஷாமுடினே பொருத்தமானவர் என பலரும் கருத்து தெரிவித்ததாக முடிவுகள் வெளியானது.

எனினும் உரிய காலகட்டத்தில் பிரதமர் பதவி தேடி வரும்போது அதை ஏற்பீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹிஷாமுடின், “அத்தகைய சூழ்நிலை இப்போது எழவில்லை. கணிப்புகளின் அடிப்படையில் எழுப்பப்படும் இத்தகைய கேள்விகளை நான் விரும்புவதில்லை,” என்றார்.