பெர்லின், மார்ச் 23 – பாகிஸ்தானில் குற்றவாளிகளுக்கு தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வருவதற்கு ஜெர்மன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 12 பேர் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர். ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி வரும் நிலையில்,
பாகிஸ்தானில் தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ஜெர்மனி அரசு அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதுதொடர்பாக ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்டு வரும் தூக்கு தண்டனையை ஜெர்மனி உன்னிப்பாக கவனித்து வருகின்றது”.
“தூக்கு தண்டனை மனித இனத்திற்கு எதிரான மிகக்கொடூரமான தண்டனை. உலக நாடுகளில் இருந்தே இந்த தண்டனையை ரத்து செய்ய ஜெர்மனி போராடி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற கருத்தினை ஐ.நா சபையும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகழிடமாக உள்ளது. தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை அந்நாடு எவ்வித முன்னேற்றமும் காணாது என அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உரக்கக் கூறி வரும் நிலையில், ஜெர்மனி போன்ற நாடுகள் மேற்கூறியவாறு கூறி வருவது பாகிஸ்தானை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.