கோலாலம்பூர், ஏப்ரல் 11 – சனிக்கிழமை அன்று பாடாங் மெர்போக்கில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குறிப்பிட்ட இடத்தில் பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெறுவதில் உரிய நடைமுறைகளை பின்பற்றியதற்காக ஏற்பாட்டாளர்களை பாராட்டியுள்ள அவர், பேரணியின் போது எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறை ஈடுபடும் என்றார்.
“பேரணிகளை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும் என்பதை தான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள். மேலும் பொது மக்கள் மற்றும் அப்பகுதி வணிகர்களுக்கு தொல்லை கொடுக்கவும் கூடாது,” என்று முந்தைய பேரணிகளை சுட்டிக் காட்டி காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
“பேச்சு சுதந்திரத்தை நடைமுறைப்படுத்தும் அக்குழுவினருக்கு யாராலும் தொல்லை ஏற்படக்கூடாது என நினைக்கிறோம். அதேசமயம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்கள் பொறுப்பு,” என்றார் அபு பக்கர்.
பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள் சட்டத்தை எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியை ‘Dewan Ulamak PAS Pusat’ ஏற்பாடு செய்துள்ளது.