Home நாடு நஜிப் – பழனிவேல் சந்திப்பு: நடந்தது என்ன ?

நஜிப் – பழனிவேல் சந்திப்பு: நடந்தது என்ன ?

523
0
SHARE
Ad

Najib -Palanivelகோலாலம்பூர், ஜூன் 25 – தன்னை இன்னும் மஇகா தலைவர் என்று கூறிக் கொள்ளும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் செவ்வாய்க்கிழமை சந்தித்ததும் அந்தச் சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதும்தான் தற்போது மஇகா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்தியாகியுள்ளது.

புத்ரா ஜெயாவிலுள்ள நஜிப் அலுவலகத்திற்கு வருமாறு பழனிவேல் அழைக்கப்பட்டதாகவும், நேற்று காலை 9 மணியளவில் அச்சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது. இச்சந்திப்பு குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் இரு தரப்பிலும் இருந்து வரவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில், மஇகா விவகாரங்களில் பிரதமர் தலையிடுவதாகக் கூறிய பழனிவேலின் பேச்சு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று பழனிவேல் அழைக்கப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

நஜிப்புடனான சந்திப்பில் பேசிய விவகாரங்கள் குறித்துப் பழனிவேல் மிகவும் மௌனம் காப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  மஇகா சட்டவிதிமுறைகள் பிரிவு 91-ஐ மீறியதால், பழனிவேல் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் என்பது குறித்து நஜிப் பழனிவேலுவிடம் பேசியிருப்பதாகப் பழனிவேலுவுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்தது.

பழனிவேலுவின் மஇகா உறுப்பியம் குறித்து, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடமிருந்து சட்ட ஆலோசனையை நஜிப் பெற்றிருக்கலாம் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

மஇகா பிரச்சனைகளைத் தீர்க்குமாறு பழனிவேல் மற்றொரு புதிய கோரிக்கையைப் பிரதமரிடம் முன்வைத்துள்ளார் என்றும் பழனிவேலுவுக்கு நெருக்கமான மற்றொரு வட்டாரம் தெரிவிக்கின்றது. , 2009 மத்தியச் செயலவைக்கு அங்கீகாரம் அளிப்பது, தனது வழக்கு நிராகரிக்கப்பட்டது, புதிய தேர்தல்கள் நடத்துவது போன்ற விவரங்கள் அதில் அடங்கும் என்றும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதி கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு இடைக்காலத் தடையுத்தரவு கோரி பழனிவேல் தரப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்ப மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

கிளைத்தேர்தல்கள் திட்டமிட்டபடி நடத்தப்படும் 

இதனிடையே, மஇகா துணைத்தலைவர் (தற்போது இடைக்காலத் தலைவர்) டாக்டர் எஸ். சுப்ரமணியம் வரும் ஜூலை 10-ம் தேதி முதல் கிளைத்தேர்தல்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

கட்சித் தேர்தலை நடத்தும் படி சங்கப்பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளதாக நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுப்ரா குறிப்பிட்டிருந்தார். தேர்தலை இந்த ஆண்டு அக்டோபருக்குள் நடத்த சங்கப் பதிவிலாகா கால நீட்டிப்பு அவகாசம் வழங்கியிருப்பதாகவும் சுப்ரா தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பழனிவேல் தனது புதிய கோரிக்கையைப் பிரதமரிடம் வழங்கியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

எனினும், கடந்த ஜூன் 21-ம் தேதி மஇகா கிளைத்தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதி முடிவு என டாக்டர் சுப்ரா மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், மஇகா சட்டவிதி பிரிவு 91-ன் விளக்கப்படி பழனிவேல் மற்றும் மற்ற நான்கு பேர் மஇகா உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டது உறுதியாகியுள்ளது. இந்தச் சட்டவிதியின் விளக்கம் கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது மத்திய செயலவையிடம் கலந்தாலோசிக்காமல் பழனிவேல் மற்றும் மற்ற 4 பேர் தனிப்பட்ட முறையில், தனிநபர்களாக வழக்குத் தொடுத்துள்ளனர் என்பது நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனிவேல் கட்டாயமாக பதவி விலகி மற்றவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக்கொள்வது தான் கட்சியில் பெரும்பான்மை கிளைத் தலைவர்களின் முடிவாகும்.

கடந்த ஜூன் 21-ம் தேதி நடைபெற்ற கிளைத் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட 2,758 கிளைத்தலைவர்களின் ஏகமனதாகத் தீர்மானம் இதுவென்பதால், அதற்கு மதிப்பளித்துச் சுப்ரா செயல்படுவதில் உறுதியாக இருக்கின்றார்.

கட்சியின் மொத்த கிளைகளில், 70 சதவிகிதம் கிளைகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜூன் 21ஆம் தேதி நடந்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பழனிவேலுவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இது தவிர 95 தொகுதிகளின் தலைவர்கள் (மொத்தமுள்ள 150 மஇகா தொகுதிகளில்) சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

“பழனிவேலின் தலைமைத்துவத்தில் மஇகா மிகவும் பலவீனப்பட்டும் பாதிப்படைந்தும் உள்ளது. அதனால் தான் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு 70 சதவிகித கிளைத்தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் பழனிவேலின் தலைமைத்துவத்திற்கு நிச்சயம் ஆதரவு தரப்போவதில்லை.  பழனிவேலை மீண்டும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு சமாதானத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை – அத்தகைய சமாதான முன்மொழிதல் பிரதமரிடம் இருந்து வந்தால்கூட” என்று டாக்டர் சுப்ராவிற்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது.