டார்ஜிலிங், ஜூலை 2- மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக 25 இடங்களில் நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்; 15 பேரைக் காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தகவல் கிடைத்தவுடன், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக மொத்தம் 100 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இது தவிர,சாலைகள் பராமரித்துறையினரும், இந்தியா – நேபாள எல்லைப் பகுதியிலுள்ள மத்திய ஆயுதப் படையினரும், சமூகச் சேவை அமைப்பினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இழப்பீடு அறிவிப்பு:
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார்.
மேலும், நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா ரூ.1.25 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டார்ஜீலிங் மலைப் பகுதியை நிர்வகித்து வரும் கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத் தலைவர் பிமல் குருங்க், “நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000ம் இழப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருப்பதோடு,”உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாகப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட டார்ஜீலிங் மாவட்டத்துக்கு நேரில் சென்று பார்வையிட, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரஜிஜுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.