Home நாடு “சுப்ரா தலைமைத்துவம் மஇகாவுக்கு வலு சேர்க்கலாம்! பழனிவேலுவின் சகாப்தம் முடிந்ததா?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

“சுப்ரா தலைமைத்துவம் மஇகாவுக்கு வலு சேர்க்கலாம்! பழனிவேலுவின் சகாப்தம் முடிந்ததா?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 7 –(டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடர்புடைய வழக்குகளில் வெளிவந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி ) Tamil Mani

நாள்காட்டியில் டிசம்பர் மாதம்31-ம் தேதிக்குப் பிறகு, அடுத்துக் கிழிக்க ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால், அடுத்த நாள் கிழிக்க முதல் தேதி, புதிய ஆண்டுடன் பிறந்து விடும்.

அந்தப் புதிய ஆண்டுதான் மஇகாவின் புதிய தலைவராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் டாக்டர் சுப்ரமணியமாகும். எப்படிப் புதிய ஆண்டு பிறப்பதைத் தவிர்க்க முடியாதோ?அதேபோன்று மஇகாவின் புதியத் தலைவராகச் சுப்ராவை வரவேற்பதையும் தவிர்க்க முடியாது.

#TamilSchoolmychoice

மரணத்தில் பலவகையுண்டு. அதில் ஒன்றுதான் சுயதற்கொலையாகும். இத்தகைய முயற்சியில் யார் ஈடுபட்டாலும் மறைமுகமான மனப் பாதிப்பு இல்லாமல் இந்தச் சுய மரணத்தை அவர்கள் தீர்மானிக்கவே முடியாது. இதுவொரு மருத்துவ முடிவுதான்.

subraஅந்த வகையில், மஇகாவின் முன்னாள் தலைவரான பழனி, தன்னைக் கட்சித்தலைவர் பதவியிலிருந்து, சில சட்டவிதிகளாலும் நீதிமன்ற அதிரடித் தீர்ப்புகளாலும், சங்கங்களின் பதிவு இலாகாவின் பல மேற்கோள்களாலும், ஒதுக்கப்படவும் ஓரங்கட்டப்படவும், பழனி சுயமாக மேற்கொண்ட தற்கொலை முயற்சியே அதற்குக் காரணமாக அமைந்து விட்டன. அவரின் இந்தச் சுய தற்கொலை முயற்சியைத் தற்போது யார் மீதாவது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியுமா? என்று பார்க்கிறார்.

அப்படியொரு முயற்சி நடந்தால், சவப்பெட்டிக்குப் போன பிறகு, பிழைத்து வர முடியுமா? என்று யோசிக்க வைப்பது போல அமைந்து விடும் அல்லவா? இதனால் ஏற்படும் பரபரப்பு எப்படி இருக்குமென்றால், “பைத்தியக்காரன் கையில் துப்பாக்கியிருந்தால் எத்தகைய ஆபத்தோ, அதைப் போன்ற நிலைதான்” பழனியின் தற்போதைய குழப்பங்களுக்குரிய வடிவமாகும்.3007 mic agm

– தற்போது பழனியின் கைநழுவிய மரணப்பட்டியல்:-

  • பிரதமர் கூறிய ஆலோசனைகளைப் புறக்கணித்தது.
  • சமரசப் பேச்சுவார்த்தையைப் புறந்தள்ளியது, புறக்கணித்தது.
  • பதிவு இலாகா வழங்கிய ஆலோசனையை அத்துமீறி நடந்தது.
  • பதிவு இலாகாவை நீதிமன்றத்திற்கு இழுத்தது, உள்துறை அமைச்சரையும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்த்தது.
  • 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முறைகேட்டை முற்றாக ஏற்க மறுத்தது.
  • 2009-ம் ஆண்டுக்கான நிர்வாகம் மறுதேர்தலை நடத்துவதை ஏற்க மறுத்தது.
  • சீராய்வு மனு என்ற பெயரில் பதிவு இலாகா முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
  • பல முறை வழக்கு ஒத்தி வைப்பால் கட்சியின் செயல் நடவடிக்கைகள் மந்தமானது, முடங்கிப் போனது.
  • வழக்கு தோற்றுப் போனதற்குப் பிறகும் மேல்முறையீடு செய்தது.
  • 2009-ம் ஆண்டுக்கான நிர்வாகம் கிளைத்தேர்தலை நடத்துவதற்கு எதிராகத் தடையுத்தரவு கோரி வழக்குத் தொடுத்து அதிலும் தோற்றுப்போனது.
  • நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தடையுத்தரவு கோரி, அதிலும் தோற்றுப்போனது.
  • இத்தகைய குழப்பங்களுக்கு இடையே துணைத்தலைவர் உட்பட 15 பேரை ஒட்டுமொத்தமாக நீக்கியது. அதேவேளையில் தனக்கு வேண்டிய 9 பேரைப் புதிதாக நியமித்தது.
  • முன்னுக்குப் பின் முரணாக 2009-ம் ஆண்டுக்கான நிர்வாகத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டது.
  • நீதிமன்றத்தில் அதேவேளை (2009) நிர்வாகத்தை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்தது.

இப்படித் தன்னைத் தற்கொலை செய்து கொள்ளும் மரண வாசலுக்குப் படிப்படியாக நகர்த்திக் கொண்டு வந்தவர் பழனி. இந்தச் சூழ்நிலையில் இப்போது இவர், வரும் 13-ம் தேதி மேல்முறையீடு செய்திருக்கும் வழக்கு தனக்கு, சாதகமாகயிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.

ஆனால், அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, அவருக்கு இன்னொரு மரண அடியாகவும், இறுதி மரண சாசனமாகவும் எழுதி வைக்கப்படப்போகிறது. அதுவே, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது.

வரும் 17-ம் தேதி ஹரிராயா வந்து அதன் மகிழ்ச்சியில் நாடே மூழ்கியிருக்கும் போது பழனியின் மனதில் மட்டும் “திக் திக்” என்ற பயம் சூழ்ந்து, அவரை வாட்டிக் கொண்டிருக்கப் போவது உறுதி. காரணம், அதன்பின் 22 அல்லது 25-க்குள் நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில், பழனியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுவிடும் அபாயம் நிலவுகின்றது.

மஇகா அடிப்படையான சட்ட விதிமுறையால் இயல்பாகத் தனது கட்சியின் உறுப்பினர் தகுதி இழக்கிற அவரால் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது. அமைச்சர் பதவி தன்னிடமிருந்து பறிபோகும் போது அவரின் தீவிர ஆதரவாளர்களும்,வேட்டு முழக்கமிடும் ஆதரவாளர்களும் டாக்டர் சுப்ராவின் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தவே செய்வார்கள்.

இங்குதான் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர விரோதியும் இல்லை என்பது பதிவு செய்யப்படும்.

அதுவரை இன்பத்தில் பங்கு பெற்றது எத்தனை பேர்? அதேவேளை துன்பத்தில் பங்கு பெற்றது எத்தனை பேர்? என்ற கணக்கெடுப்பு மட்டும் அவர்களை அறியாமலேயே பின்னால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும்.

காரணம், அதுதான் அரசியல்…..

-பெரு.அ.தமிழ்மணி

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்குச் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இந்தக் கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.

 தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

 wrrcentre@gmail.com