Home நாடு பண்டிதன் காலத்தில் ஆயிரக்கணக்கான கிளைகள் வெளியேறினவா? நடந்தது என்ன?

பண்டிதன் காலத்தில் ஆயிரக்கணக்கான கிளைகள் வெளியேறினவா? நடந்தது என்ன?

990
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 7 – இன்று தமிழ் நாளேடுகளில் வந்துள்ள ஒரு சிலரின் அறிக்கைகளின்படி, மஇகாவில் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் காலத்தில், ஆயிரக்கணக்கான மஇகா கிளைகள் கட்சியிலிருந்து வெளியேறியதாகவும், அத்தகைய நிலைமை மீண்டும் கட்சியில் ஏற்பட்டு விடக் கூடாது என்ற தொனியிலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Samyvellu -Pandithan

ஐபிஎப் கட்சி மாநாட்டில் சாமிவேலு-பண்டிதன்! பின்னாளில் இருவரும் அரசியல் பகைமைகளை மறந்து கைகோர்த்துக் கொண்டனர்

#TamilSchoolmychoice

மஇகாவில் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் காலத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை ஆதாரப்பூர்வமாக, இந்த நேரத்தில் திரும்பிப் பார்ப்பதன் மூலம் சில வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வர முடியும்.

பண்டிதன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட 1988ஆம் ஆண்டில் மஇகாவில் இருந்தது ஏறத்தாழ 2,000 கிளைகள்தான்.

இன்று 2015ஆம் ஆண்டில்கூட சுமார் 3,700 கிளைகள்தான் செயல்படுகின்றன என்பதை வைத்துப் பார்க்கும்போது, இன்றைக்கு 27 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான கிளைகள் மஇகாவிலிருந்து வெளியேறின என்பது உண்மையில்லை. மஇகா தலைமையக ஆவணங்களே இதற்குச் சான்று கூறும்!

சுமார் 300 கிளைகள்தான் முடக்கப்பட்டன

1987ஆம் ஆண்டில் டத்தோ (டான்ஸ்ரீ) ஜி.பாசமாணிக்கம், டத்தோ முத்து பழனியப்பன், டத்தோ (டான்ஸ்ரீ) எம்.மகாலிங்கம் ஆகிய மூவரும் அன்றைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆசிபெற்ற வேட்பாளர்களாக – டத்தோக்கள் கூட்டணி என்ற பெயரில் – உதவித் தலைவர்கள் தேர்தலில் குதித்தனர்.

அப்போது நடப்பு உதவித் தலைவர்களாக இருந்த டத்தோ கு.பத்மநாபன், டத்தோ எம்.ஜி.பண்டிதன் இருவரும் அப்போதைய துணைத்தலைவர் டத்தோ (தற்போது டான்ஸ்ரீ) சுப்ராவின் (படம்) தீவிர ஆதரவாளர்களாகச் செயல்பட்டனர்.

Tan Sri Subraஅந்தப் போட்டியில் பத்மநாபன், பண்டிதன், டத்தோ எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகிய மூவரும் ஒரே அணியாகச் சுப்ரா தரப்பு ஆதரவோடு போட்டியிட்டு சாமிவேலுவின் ஆசி பெற்ற டத்தோக்கள் கூட்டணியைத் தோற்கடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சாமிவேலுவின் ஆதிக்கமும், ஆதரவும் கட்சியில் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் கட்சியில் ஏற்பட்டது.

கட்சியில் மீண்டும் தனது தலைமைத்துவ ஆற்றலை, ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சாமிவேலு தொடர்ந்து அடுத்த 1988ஆம் ஆண்டில் 300க்கும் மேற்பட்ட கிளைகளைப் பல்வேறு காரணங்களுக்காக, முறையான அறிவிப்புக் கொடுத்து, மூடினார்.

கிளைகளின் உறுப்பினர் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தது – முறையான கூட்டங்கள் நடத்தாதது – ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய எண்ணிக்கை (கோரம் – Quorum) இல்லாதது – எனப் பல்வேறு காரணங்களால் அரசியல் நோக்கத்திற்காக இந்தக் கிளைகள் மூடப்பட்டன.

இந்தக் கிளைகள் அனைத்தும் சுப்ரா, பத்மா, பண்டிதன் என அனைவருக்கும் ஆதரவான கிளைகள்தான் என்பதோடு, இவற்றில் பண்டிதன் ஆதரவு பெற்ற கிளைகள் மட்டும் அடங்கியிருக்கவில்லை.

அதே சமயம், பண்டிதன் ஒரு சவப் பெட்டியை மஇகா தலைமையகத்திற்குள் கொண்டுவந்து போராட்டம் நடத்தினார் என்பதற்காகக் கட்சியிலிருந்து 1988ஆம் ஆண்டில் விலக்கப்பட்டபோது -அவருடன் சேர்ந்து பல மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும் கட்சியிலிருந்து அவருடன் வெளியேறினர் என்பதும் உண்மைதான்.

வெளியேறிய உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கலாமே தவிர, கிளைகள் ஆயிரக்கணக்கில் இருக்க வாய்ப்பில்லை.

பின்னர், மூடப்பட்ட இந்தக் கிளைகள் எல்லாம் – பண்டிதனோடு வெளியேறிய கிளைகள் எல்லாம் – கட்டம் கட்டமாக, மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதே தலைவர்களைக் கொண்டு மீண்டும் செயல்பட அதே சாமிவேலு தலைமைத்துவத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டன.

பல கிளைகள் புதிய பொறுப்பாளர்களைக் கொண்டு மீண்டும் பதிவு பெற்று செயல்பட ஆரம்பித்தன.

Samy-Subra

இந்தக் கிளைகளின் மூடுவிழா காரணமாகத்தான் 1989ஆம் ஆண்டில் சாமிவேலுவுக்கும் சுப்ராவுக்கும் இடையிலான தேசியத்தலைவர் போட்டியும் நடந்தது என்பது வரலாற்று உண்மை.

இப்போது நடப்பது என்ன?

subraஎனவே, கட்சியில் இப்போது நடக்கும் சம்பவங்களுக்குப் பண்டிதன் காலத்தை ஒப்பிடுவது சற்றும் பொருத்தமல்ல.

இன்றைய நிலையில் கட்சியில் உள்ள அனைத்து மஇகா கிளைகளும், வேட்பு மனுத் தாக்கலில் பங்கு பெறலாம் என இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா (படம்) உட்பட மற்ற பொறுப்பாளர்களும் அறிவித்துள்ளனர்.

எந்தக் கிளைக்கும் தடையும் விதிக்கப்படவில்லை – எந்தக் கிளைக்கும் மூடுவிழாவும் இல்லை!

டாக்டர் சுப்ரா தலைமையில் மஇகா தலைமையகம் முறையான நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, முறையான சங்கப் பதிவக அங்கீகாரக் கடிதம் பெற்று இந்த வேட்புமனுத் தாக்கல்களை ஜூலை 10, 11, 12 தேதிகளில் சட்டபூர்வமாக நடத்துகின்றது.

ஆனால், இதற்கு மேலும், பழனிவேல் தரப்பினர் நடத்தும் வேட்புமனுத் தாக்கலில்தான் நாங்கள் பங்கு பெறுவோம் – சுப்ரா தரப்பினர் நடத்தும் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெற மாட்டோம் – என சில மஇகா கிளைகள் ஒதுங்கி இருந்தால் – அல்லது அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டால் –

அது அவர்களின் சுய அரசியல் முடிவுதானே தவிர, கட்சியின் தலைமையோ, மஇகா தலைமையகமோ அதற்குப் பொறுப்பேற்க முடியாது.

-இரா.முத்தரசன்