கோலாலம்பூர், ஜூலை 7 – “பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1எம்டிபி விவகாரத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகளில் எத்தகைய ஆதாரமும் இல்லை. மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது தான் ஒருவர் தனது பதவியில் நீடிக்கக் கூடாது.”
“தற்போது, 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடந்து கொண்டிருப்பதால் பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்ற ஒன்று” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழமை, 1எம்டிபி விவகாரத்தில், 700 மில்லியன் டாலர்கள் அளவிற்குப் பணம், பிரதமர் நஜிப்பின் தனிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டைத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், விசாரணை முடியும் வரை பிரதமர், பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.