சென்னை, ஜூலை 14- மெல்லிசை மன்னர் எனப் போற்றப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் காலமானார். அவருக்கு வயது 87.
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்தார். சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில், எம்.எஸ்.வியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகத்தினர், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என எம்.எஸ்.விஸ்வநாதனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த எம்.எஸ். விஸ்வநாதனின் மறைவு இசை உலகிற்கு மாபெரும் இழப்பு என திரையுலகினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.