கவுகாத்தி, ஜுலை 17- அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ‘தானி ராம் பருவா’ என்னும் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர், உலகச் சுகாதார அமைப்புக்கும் ஐக்கிய நாடுகள் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபைத் திட்ட அமைப்புக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதன் மூலம் 86 எய்ட்ஸ் நோயாளிகளைக் குணப்படுத்தி இருப்பதாகவும், ஆகவே தனது ஆய்வை அங்கீகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இமயமலைப் பகுதியில் காணப்படும் ஒருவித மூலிகைத் தாவரத்தைக் கொண்டு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ள அவர், பிரித்தெடுக்கப்பட்ட அந்தத் தாவரத்தின் ரசாயன மூலக்கூறுகளுக்கு எய்ஸ்ட் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் திறன் உண்டு எனக் கூறியுள்ளார்.
ஆனாலும், இது போல் கூறுவது இது முதல் முறையன்று. ஏற்கனவே அவர், 1997-ஆம் ஆண்டு அவர் 32 வயது ஆண் ஒருவருக்குப் பன்றியின் இருதயத்தை வைத்து அறுவைச் சிகிச்சை செய்தார் என, 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அவ்வாறு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை பெற்றவர் 7 நாட்களில் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தினத்தந்திச் செய்தியிலிருந்து…)