புதுடெல்லி, ஜூலை 23-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கருணை மனுக்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து அடங்கிய 5 நபர் அரசியல் சாசன அமர்வு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இறுதி வாதம் நடந்து வருகிறது.
மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் ரஞ்ஜித் குமார் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:
“இந்த வழக்கில் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தும் மத்திய அரசு இயற்றிய சட்டங்களின் கீழ் வருபவை. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் சி.பி.ஐ. விசாரணையின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய முடியாது.
இவர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரின் படுகொலையில் தண்டிக்கப்பட்டவர்கள். மாநில அரசோ, மத்திய அரசோ இவர்களுக்கு மேலும் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வழக்கைப் பொருத்தவரை, ஏற்கனவே குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஆளுநராலும், அதிபராலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பிறகு நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் மூலம் மரண தண்டனையானது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் தங்கள் தண்டனையில் இருந்து மீண்டும் விடுவிக்கப்பட வேண்டுமென்றால் ஆளுநரிடம் மீண்டும் கருணை மனுவைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை.
இந்நிலையில், மத்திய அரசை எந்த வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தமிழக அரசு, சட்டசபையில் இயற்றிய தீர்மானம் மூலமாக இவர்களை விடுவிப்பதாக அறிவித்தது. இது முற்றிலும் ஏற்புடையது அல்ல” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனுவை நிராகரித்த பின்னர் ஆளுநர் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார், “சூழ்நிலை மாறியிருந்தால் நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. இது குறித்து நீதிமன்றம் தெளிவான வரையறை ஒன்றை வகுக்கவேண்டும். இதுபோலக் கருணை மனுக்கள் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், முடிவே இல்லாமல் இது நீண்டு கொண்டே போகும். மேலும் கருணை மனு என்கிற வாய்ப்பு தவறாகப் பயன்படுத்துவதைப் போல அமைந்துவிடும். இதை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
அடுத்து,”குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஞ்சித்குமார், “மாநில அரசின் சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதுவும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே தண்டனையைக் குறைக்க முடியும்” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் மத்திய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலோ, மத்திய அமைப்புகள் புலனாய்வு செய்திருந்தாலோ தண்டனையைக் குறைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் வாதம் இன்றும் தொடர உள்ளது.